பிரதான மூன்று கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை மின்சாரசபை ஊழியர்கள் இன்று நண்பகல் 12மணி முதல் 48 மணித்தியால பணிப் பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை மின்சார சேவை சங்கத்தின் செயலாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,
நுகர்வோரின் மின் கட்டண பட்டியலை சரிப்படுத்த வேண்டும், கொடுப்பனவுகள் செலுத்தப்படாமல் இருக்கும் ஊழியர் சேமலாப நிதியத்தில் 2ஆயிரம் மில்லியன் ரூபா வைப்பிலிடவேண்டும் மற்றும் சம்பள முரண்பாடுகளை தீர்க்கவேண்டும் என்ற மூன்று கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை மின்சாரசபை ஊழியர்கள் இன்று நண்பகல் 12மணி முதல் நாடளாவிய ரீதியில் 48 மணித்தியாலம் பணிப் பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.
2014ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கத்தில் சட்டவிரோதமான முறையில் மின்சாரசபை ஊழியர்களுக்கு 70வீதம் முதல் 120வீதம் வரை சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டது. இந்த சம்பள அதிகரிப்புக்கு எந்தவித சட்ட அனுமதியோ அல்லது திறைசேரியின் அனுமதியோ பெறப்படவில்லை. இதனால் ஊழியர்களின் சம்பளத்தில் பாரிய முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை நிவர்த்திசெய்யுமாறு அரசாங்கத்திடம் பலதடவை தெரிவித்துள்ளோம்.
அத்துடன் சட்டவிரோதமான முறையில் அனுமதிக்கப்பட்ட இந்த சம்பள அதிகரிப்பு காரணமாக மாதாந்தம் 600கோடி ரூபா செலவிடப்படுகின்றது. இதனால் மின்சாரசபைக்கு ஏற்படக்கூடிய நஷ்டத்தை நுகர்வோரிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
அதற்காக மின்சார கட்டணத்தை அதிகரிக்கவேண்டும் என மின்சாரசபையின் நிர்வாக அதிகாரிகள் அரசாங்கத்திடம் தெரிவித்து வருகின்றனர்.
மின்சாரசபையில் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத சம்பள அதிகரிப்பு காரணமாக தற்போது ஏற்பட்டுவரும் நிதி நெருக்கடியை போக்குவதற்காக நுகர்வோரின் மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு அனுமதிக்க முடியாது.
அத்துடன் அதிகாரிகளின் ஊழல் மற்றும் வீண்விரயங்கள் காரணமாக மின்சாரசபைக்கு ஏற்பட்டிருக்கும் நஷ்டத்தை போக்கும்வகையில் தற்போது ஒவ்வொரு மின் கட்டண பட்டியலுக்கும் உண்மையான மின் கட்டணத்துக்கு 50வீத கட்டண அதிகரிப்பு சேர்க்கப்பட்டு மின் கட்டண பட்டியல் தயாரிக்கப்படுகின்றது. இவை சரிசெய்யப்படவேண்டும்.
எனவே பணிப்பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்படும் 48 மணி நேரத்துக்குள் எமது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் முறையான தீர்வொன்றை பெற்றுத்தராவிட்டால் எதிர்வரும் 15ஆம் திகதி நண்பகல் 12மணி முதல் தொடர் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்துக்கு செல்வோம் என்றார்.