யுத்தத்தின் போதும் அதன் பின்னரான காலப்பகுதியிலும் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவினர்கள் குறித்த உண்மை நிலையை வெளிப்படுத்துமாறு கோரி, கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று (வியாழக்கிழமை) 200 நாட்களை எட்டியுள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் கொட்டகை அமைத்து, மழையையும் வெயிலையும் பொருட்படுத்தாது இம் மக்கள் இரவு பகலாக தமது போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இம் மக்களை பல்வேறு தரப்பினர் வந்து சந்தித்து சென்றபோதும், எவ்வித தீர்வும் கிடைக்கப்பெறாத நிலையில் இம் மக்கள் தமது உறவுகளுக்காக கண்ணீருடன் காத்திருக்கின்றனர்.
கொழும்பிற்கு வந்து போராட்டம் நடத்தியும், ஜனாதிபதியை சந்தித்தும்கூட இம் மக்களுக்கு சாதமான பதில் கிடைக்காத அதேவேளை, காணாமல் போனோர் உயிருடன் இல்லை என்றவாறான கருத்துக்களை பிரதமர் உள்ளிட்டோர் கூறி வருகின்றனர்.
எனினும், இறுதி யுத்தத்தின் போது உயிருடன் ராணுவத்திடம் கையளிக்கப்பட்டவர்கள் எவ்வாறு உயிருடன் இல்லாமல் போவார்கள் என்பது பாதிக்கப்பட்டோரின் கேள்வியாக உள்ளதோடு, உயிருடன் இல்லாவிட்டால் யார், எதற்காக கொலை செய்தார்கள் என்ற கேள்விகளுக்கு பதில் கூற வேண்டுமெனவும் கோரி நிற்கின்றனர்.
தனது மகன் இன்று வருவான் நாளை வருவான் என காத்திருந்தே, அண்மையில் தாயொருவர் உயிரை விட்ட சம்பவமும் பதிவாகியுள்ளது.
காணாமல் போனோர் தொடர்பில் அலுவலகம் ஒன்றை அமைப்பதாக அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியும் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளதால், அரசாங்கத்தின் மீது நம்பிக்கை அற்றுப்போன இம்மக்கள், சர்வதேசத்தின் தலையீட்டுடனான விசாரணை ஒன்றே நீதியை வழங்குவதற்கான ஒரே வழியென வலியுறுத்தி வருகின்றனர்.