உலகலாவிய முஸ்லிம்கள் புனித ஹஜ் பெருநாளை இன்று கொண்டாடுகின்றனர்.
இதனை முன்னிட்டு நாட்டின் அனைத்து பாகங்களிலும் உள்ள பள்ளிவாசல்களில் விசட பெருநாள் தொழுகைகள் இடம்பெறுவதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை ஹஜ் பெருநாளை முன்னிட்டு ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன வாழ்த்துச் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் ஹஜ் பெருநாள் சமத்துவத்தின் அடிபடையிலான உயரிய சமூக நீதிக்கு வழிவகுப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இறைவனுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பை மிக அழமான முறையில் ஹஜ் பெருநாள் எடுத்து காட்டுவதாகவும் ஜனாதிபதி தமது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பல் சமூகத்தவர்கள் ஒற்றுமையுடனும், புரிந்துணர்வுடனும் வாழ ஹஜ் பெருநாள் சந்தர்பத்தை ஏற்படுத்தி கொடுப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தமது ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
மேலும் சகவாழ்வு, சமத்துவம் என்பவற்றின் பொருளை ஹஜ் பெருநாள் மனிதகுலத்துக்கு உணர்த்துவதாகவும் பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இறைவனுக்காகவும், தமது சகோதர மனிதர்களுக்காகவும் ஒருவர் செய்யக் கூடிய தியாகத்தின் முக்கியத்துவத்தை புனித ஹஜ்ஜுப் பெருநாள் தினமானது பிரதிபலிப்பதாக எதிர்க் கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் வெளியிட்டுள்ள ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு சமூகங்களைச் சார்ந்தவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வதற்கும், ஒற்றுமையுடனும் சமாதானத்துடனும் வாழ்வதற்கும் உதவுகின்ற அர்ப்பணிப்பின் முக்கியத்துவம் பற்றி புனித ஹஜ்ஜுப் பெருநாளின் ஊடாக நினைவூட்டப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே இந்த நாளில் ஹஜ்ஜுப் பெருநாளின் உண்மையான தார்பரியத்தினை உணர்ந்து ஒருவரையொருவர் புரிந்துகொண்டு, மற்றையவர்களின் பல்வகைமைக்கு மதிப்பளிக்குமாறு இலங்கை மக்களிடம் மிகவும் அன்புடன் வேண்டிக்கொள்வதாகவும் எதிர்க் கட்சித் தலைவர் கேட்டுள்ளார்.