இலங்கை மக்களை மலேரியா தாக்கும் அச்சுறுத்தல் உள்ளது!

இலங்கையில் உள்ள மக்கள் அனைவரும் மறைமுகமாக மலேரியா தாக்கத்திற்கு உள்ளாகக்கூடிய சந்தர்ப்பம் மிக மிக அதிகமாக உள்ளதாக மலேரியா நோய் தடுப்பு பிரிவின் மன்னார் மாவட்ட பிராந்திய வைத்திய அதிகாரி டாக்டர் கே.அரவிந்தன் தெரிவித்துள்ளார்.

மலேரியா நுளம்பின் தாக்கம் மற்றும் அதன் பரவல் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் மலேரியா நோயின் தாக்கம் பரவும் சந்தர்ப்பம் காணப்பட்டுள்ள போதும், மன்னார் மாவட்டத்தில் அண்மையில் மலேரியா நோயை பரப்பும் புதிய வகை காவி நுளம்பு அடையாளம் காணப்பட்டுள்ளது.

குறித்த நுளம்பு இந்தியாவில் இருந்து டோலர் படகுகள் மூலம் இலங்கைக்குள் உட்பிரவேசித்திருக்கலாம் என நாங்கள் சந்தேகிக்கின்றோம். இந்த நிலையில் மலேரியா தடை இயக்கமானது குறித்த பிரதேசங்களில் உள்ள மக்களுக்கு தொடர்ச்சியாக விழிர்ப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.

மலேரியா நுளம்பின் பெருக்கம் அதிகரிக்கும் என்ற அச்சம் எம் மத்தியில் காணப்படுகின்றது. எனவே மக்களின் ஒத்துழைப்பு மிக அவசியமாக காணப்படுகின்றது.

இலங்கையில் உள்ள மக்கள் அனைவருமே மறைமுகமாக மலேரியா தாக்கத்திற்கு உள்ளாகக்கூடிய சந்தர்ப்பம் மிக மிக அதிகமாக உள்ளது.

எனவே மக்களின் பூரண ஒத்துழைப்பும், குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் அரச, அரச சார்பற்ற மற்றும் மக்களின் ஒத்துழைப்பும் அதிகமாக காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Posts