வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 9 மாணவர்களுக்கு வெளிநாட்டில் உயர்கல்வி கற்பதற்கான புலமைப்பரிசில்கள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வழங்கி வைக்கப்பட்டன.
திகுவி கல்விச் சேவைகள் நிறுவனத்தின் ஏற்பாட்டில், யாழ். ஜெட்விங் நட்சத்திர ஹோட்டலில் இடம்பெற்ற நிகழ்வின் போது குறித்த புலமைப்பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
மாணவர்களுக்கான புலமைப்பரிசில்களை வடக்கு மாகாண முதலமைச்சரும், ஓய்வுபெற்ற நீதியரசருமான சீ.வி.விக்னேஸ்வரன் வழங்கி வைத்துள்ளார்.
அத்துடன், உலக தரத்திற்கான சர்வதேச மத்திய நிலையம் திறன் அபிவிருத்தி அடிப்படை பயிற்சி மற்றும் கல்விக்கான புலமைப்பரிசில் திட்டத்தினை மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைப்பதற்குரிய காணிப்பத்திரமும் இதன் போது வழங்கி வைக்கப்பட்டன.
இந்த புலமைப்பரிசில் திட்டத்தில் வடக்கு கிழக்கு மாகாணத்தில் இருந்து வவுனியா, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு ஆகிய பகுதிகைளைச் சேர்ந்த 9 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அதில் 5 மாணவர்கள் கனடாவிற்கும், 4 மாணவர்கள் மலேசியாவிலும் கல்வி கற்பதற்கான புலமைப்பரிசிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், எஸ்.வியாழேந்திரன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர், தர்மலிங்கம் சித்தார்த்தன், வடக்கு மாகாண விவசாய அமைச்சர் க.சிவநேசன், வடக்கு மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் உட்பட திகுவி கல்விச் சேவை நிறுவனத்தின் அதிகாரிகள், மாணவர்கள் எனப்பலர் கலந்துகொண்டனர்.