அநுராபுர சிறைச்சாலையில் மூன்று அரசியல் கைதிகள் முன்னெடுத்த தொடர் உண்ணாவிரத போராட்டம் இன்றுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய இயக்கத்தின் தலைவர் அருட் தந்தை சக்திவேல் தெரிவித்தார்.
குறித்த மூன்று அரசியல் கைதிகளால் முன்னெடுக்கப்பட்டு வந்த இந்த உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்து இன்றும் 5 ஆவது நாளாக நடைப்பெற்று வந்த நிலையிலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அநுராதபுரசிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகளான மதியரசன் சுலக்ஷன், கணேஷன் தர்சன், ஆர். திருவருள் ஆகியோர் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் குறித்த உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து வந்தனர்.
இவர்களுக்கு எதிராக வவுனியா மேல்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டிருக்கும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய நிலையில், குறித்த வழக்கை வேறொரு நீதிமன்றத்துக்கு மாற்றும் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த தொடர் உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுத்துவந்தமை குறிப்பிடத்தக்கது.