பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை எவ்வித நிபந்தனைகளும் இன்றி விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்தி, வடக்கு மாகாண சபையில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண சபையின் 103வது அமர்வு இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகின்ற நிலையில், மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் இக் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சபை ஆரம்பத்தின் போது நடைபெற்ற இக் கவனயீர்ப்பு போராட்டத்தில், ‘அரசே! அரசியல் கைதிகளை விடுதலை செய்’, பயங்கரவாத தடை சட்டத்தை இரத்து செய்’, ‘புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளுக்கு ஆயுள் தண்டனையா?’, சிறைச்சாலைகளில் அரசியல் கைதிளை வைத்து கொண்டு தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியுமா?’ போன்ற பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை மாகாண சபை உறுப்பினர்கள் தாங்கியிருந்தனர்.
இந்நிலையில், அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் இராணுவத்தினர் வசமுள்ள மக்களின் பூர்வீக காணிகளின் விடுவிப்பு போன்ற விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அந்த கடிதத்தின் அடிப்படையில் ஆளுநரிடம் ஜனாதிபதி விரிவான அறிக்கையொன்றை கோரியுள்ளதாகவும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் சபையில் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து கவனயீர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டது.