மக்கள் சேவையைக் கருத்தில் வைத்து எமது தனியான விருப்பு வெறுப்புக்களைத் தியாகம் செய்ய வேண்டும்! : முதலமைச்சர் சி.வி

“நாம் இருவேறு கடமைகளில் ஈடுபட்டுள்ளோம். கட்சி நலம் கருதி சிபாரிசு செய்வது உங்கள் பொறுப்பு. ஆட்சி நலம் சார்ந்து நடவடிக்கை எடுப்பது முதலமைச்சர் பொறுப்பு. கட்சிகளால் நியமிக்கப்பட்டவர்கள் அல்லாது பிறரை முன்னைய அமைச்சரவையில் உள்ளடக்கியதாக நீங்களே குறிப்பிட்டுள்ளீர்கள். அது வாஸ்தவமே” என்று, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் பதில் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகம் ந.ஸ்ரீகாந்தா,

செவ்வாய்க்கிழமை (22) அனுப்பியிருந்த கடித்துக்கு, முதலமைச்சர் சி.வி. விக்னேஸவரன் நேற்று (23) அனுப்பிவைத்துள்ள பதில் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“அமைச்சர்களை நியமிப்பது முதலமைச்சரின் பொறுப்பு. அப்பொறுப்பானது உங்களை உள்ளடக்கிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கட்சித்தலைவர்கள் யாவராலும் அண்மையில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அவ்வாறு நியமிக்கும் போது தகைமை, கட்சி, மாவட்டம், பால் சமநிலை, மக்கள் செல்வாக்கு, கூட்டுறவு மனப்பான்மை போன்ற பலதையும் மனதிற் கொண்டே முதலமைச்சர், அமைச்சர்களை நியமிக்கின்றார்.

வெறுமனே கட்சி அடிப்படையிலும் கட்சியின் தலைமைத்துவத்தின் விருப்பு வெறுப்புக்களுக்கும் அமைய நியமனங்கள் அமைவதில்லை. கூடிய வரையில் கட்சியின் சிபார்சுகள் சிந்தனைக்கு எடுக்கப்படுவன. கட்சிகள் எடுக்கும் தீர்மானங்கள் சிபாரிசுகளே அன்றி ஒரு முதலமைச்சரைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாகக் கொள்ளக் கூடாது.

ஆனால், அவ்வாறான புறக்கணிப்புக்கள் அரசியல் ரீதியாக முதலமைச்சரொருவரை வெகுவாகப் பாதிக்கக் கூடியவை என்பதை நான் நன்றாக உணர்ந்தவன். அதற்காகக் கட்சிகளின் தலைமைத்துவம் கூறுகின்றார்கள் என்ற ஒரே காரணத்துக்காக எனது தீர்மானங்களைப் பிறழச் செய்வதற்கு நான் தயாரில்லை.

உங்கள் கட்சியானது இருவரில் ஒருவர் சம்பந்தமாக தீர்மானம் எடுக்கப் போவதாகப் பத்திரிகைகளில் செய்தி வெளிவந்திருந்தது. அவ்விருவரில் ஒருவரான வைத்திய கலாநிதி ஒருவேளை தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால் எனது பணி இலகுவாக்கப்பட்டிருக்கும். ஆனால் அவ்வாறு நடைபெறாததால் எனது தற்துணிபுரித்தை நான் பாவிக்க வேண்டி வந்தது.

விந்தன் கனகரத்தினத்தின் மீது எனக்கு எந்த வித மனஸ்தாபமும் இல்லை. அவர் எமக்குப் பல விதங்களிலும் வேண்டியவர். உதவி செய்தவர். எமது நம்பிக்கைக்குப் பாத்திரமானவர். ஆனால் பல வித காரணங்கள் அவரை சுகாதார அமைச்சராக நியமிக்க முடியாது என்னைத் தடுக்கின்றன.

புளொட்டைச் சேர்ந்த சிவநேசனுக்கு ஏற்கனவே அமைச்சர் பதவி கொடுக்கப்பட இருந்தமையை விந்தன் கனகரத்தினத்துக்குத் தெரியப்படுத்தியிருந்தேன். அதை அவர் ஏற்றும் இருந்தார். அதனால்த்தான் சுகாதார அமைச்சைக் கொண்டு நடத்தக்கூடிய வல்லமை தனக்குள்ளதென அறிவித்திருந்தார்.

விந்தனுடன் தொடர்ந்து நல்லெண்ணத்துடன் எமது பணிகளை நடத்திச் செல்லவே நான் விரும்புகின்றேன். கட்சி அதற்குத் தடையாக இருக்காது என்று நம்புகின்றேன். மக்கள் சேவையைக் கருத்தில் வைத்து எமது தனியான விருப்பு வெறுப்புக்களைத் தியாகம் செய்து முன்னேற முன்வர வேண்டும் என்று உங்களிடமும் உங்களின் கட்சியிடமும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்” என்றும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts