கேப்பாப்புலவு மக்களை மீளக்குடியமர்த்துவதற்காக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் எஞ்சியுள்ள காணியில் 111 காணியை விடுவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அங்குள்ள இராணுவ முகாமினை வேறோரு இடத்தில் அமைப்பதற்கான நிதியினை அரசாங்கம் வழங்கவுள்ளது.
இதுதொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் காணி அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான கயந்த கருணாதிலக இதனை தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
முல்லைத்தீவு மாவட்டத்தின் கோப்பாபுலவு கிராமத்து மக்களை மீள்குடியேற்றுவதற்காக இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 432 ஏக்கர் தனியார் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் 111 ஏக்கர் காணியினை விடுவிப்பதற்கு இராணுவ தளபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், கேப்பாபுலவில் காணப்படுகின்ற இராணு முகாமினை பிறிதொரு இடத்தில் அமைப்பதற்கு தேவையான நிதியினை வழங்குவதற்கு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்ற மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் சமர்ப்பித்த ஆவணங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.