வடக்கு மாகாணத்தின் மீன்பிடி அமைச்சராக சிவனேசனும், சுகாதார அமைச்சராக வைத்திய கலாநிதி குணசீலனும் சற்றுமுன் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.
வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில், ஆளுநர் ரெனினோல்ட் குரே முன்னிலையில், இவர்கள் இருவரும் அமைச்சர்களாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். இதன்போது, முதலமைச்சர் விக்னேஸ்வரனும் உடனிருந்தார்.
வடக்கு மாகாண அமைச்சரவையில் அண்மைய காலமாக நீடித்து வந்த சர்ச்சைகளுக்கு மத்தியில், அமைச்சரவையில் மாற்றத்தை ஏற்படுத்த முதலமைச்சர் தீர்மானித்தார்.
குறிப்பாக வடக்கு மாகாணத்தின் நான்கு அமைச்சர்கள் மீது ஊழல் மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்த நிலையில், அவர்களில் ஐங்கரநேசனும் குருகுலராசாவும் ஏற்கனவே பதவி விலகியிருந்தனர்.
தொடர்ந்து, தமிழரசுக் கட்சியின் தீர்மானத்திற்கு அமைவாக சத்தியலிங்கமும் பதவி விலகிய நிலையில், அமைச்சுப் பதவியிலிருந்து விலக முடியாதென ரெலோவைச் சேர்ந்த டெனீஸ்வரன் தெரிவித்தார்.
இந்நிலையில், முதலமைச்சர் தமது அதிகாரத்தை பயன்படுத்தி டெனீஸ்வரனை பதவி விலக்க வேண்டுமென ரெலோ அறிவித்திருந்தது.
இதனடிப்படையில், டெனீஸ்வரனை பதவி விலக்கி விட்டு, ரெலோ சார்பில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த குணசீலனுக்கும், புளொட் சார்பில் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த சிவனேசனுக்கும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
வட மாகாண புதிய அமைச்சர்கள் விவரம்:
சுகாதாரம், சிறுவர் நலன் அமைச்சர் – மருத்துவர் குணசீலன்
விவசாய கால் நடை, நீர்ப்பாசன, சுற்றுச்சூழல், மீன்பிடி அமைச்சர்-க.சிவனேசன்
மகளிர் விவகாரம், புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், சமூகசேவைகள் கூட்டுறவு, உணவு விநியோகம் மற்றும் வழங்கல், கைத்தொழில், வர்த்தக அமைச்சர் : அனந்தி சசிதரன்
நிதி, திட்டமிடல், சட்டம் ஒழுங்கு, காணி, மின்சாரம், வீடமைப்பு நிர்மாணம், சுற்றுலா, உள்ளுராட்சி, நிர்வாகம், கிராமிய அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, போக்குவரத்து அமைச்சர் : முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன்.