“வட மாகாண சபையில் டெலோவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள அமைச்சுப் பதவியை, டெலோவின் உத்தியோகபூர்வ பரிந்துரையை மீறி குணசீலனுக்கு வழங்குவதற்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் செயற்படுவது, டெலோவுக்குள் கடும் அதிர்வலைகளையும் குழப்பத்தையும் ஏமாற்றத்தையும் தோற்றுவித்துள்ளது” என, டெலோ தெரிவித்துள்ளது.
இது குறித்து விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“அமைச்சர் பா.டெனிஸ்வரன் டெலோவின் கொள்கைகளுக்கும் நிலைப்பாடுகளுக்கும் அப்பால் சென்று வடக்கு மாகாண முதலமைச்சருக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் முகமாக முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் கையொப்பமிட்டிருந்தார்.
“மேலும், முதலமைச்சரால் இரண்டாம் முறை நியமிக்கப்படவிருந்த ஊழல் மற்றும் துஷ்பிரயோகங்கள் சம்பந்தமான விசாரணைக் குழுவுக்கு முகங்கொடுப்பதிலும் மறுப்புத் தெரிவித்து வந்தார்.
“இந்நிலையில் முதலமைச்சரின் பணிக்குத் தடையாக இருக்கும் பா. டெனிஸ்வரனை அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கிவிட்டு அப்பதவிக்கு டெலோவினால் பரிந்துரைக்கப்படும் வேறு ஒருவரை நியமிக்குமாறு முதலமைச்சரை உத்தியோகபூர்வமாக டெலோ கேட்டிருந்தது. அதற்கு முதலமைச்சரும் தாமதங்கள் இன்றி ஆமோதித்து கடிதப் பரிமாற்றங்களில் ஈடுபட்டார்.
“டெலோ சார்பான புதிய அமைச்சரை நியமிப்பதில் டெலோ பல கூட்டங்களைக் கூட்டி ஆராய்ந்திருந்தது. கடந்த ஜூலை 16ஆம் திகதி வவுனியாவில் இடம்பெற்ற டெலோவின் அரசியல் உயர்பீடக் கூட்டத்தில் அமைச்சராக நியமிக்கப்படக்கூடிய உறுப்பினர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. அதில் தற்போது அமைச்சர் வாரியத்துக்கு நியமிக்கப்படுவதற்கு முதலமைச்சரால் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக ஊடகங்களின் தெரிவிக்கும் குணசீலனின் பெயர், பல குற்றச்சாட்டுகளின் காரணங்களால் டெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனால் முற்றாக நிராகரிக்கப்பட்டது.
“மிகுதியாக இருக்கின்ற டெலோவின் வட மாகாண சபை உறுப்பினர்களில் விந்தனுடைய பெயரும் சிவாஜிலிங்கத்தின் பெயரும் கடந்த மாதம் வவுனியாவில் நடைபெற்ற அரசியல் உயர்பீடக் கூட்டத்தில் கவனத்தில் கொள்ளப்பட்டு வாக்கெடுக்கப்பட்டது. இதன்போது, ஒன்பது அரசியல் உயர்பீட உறுப்பினர்களில் கலந்துகொண்ட எட்டு பேரில், ஐந்து பேர் விந்தன் கனகரட்ணத்தையும் மிகுதி மூவர் சிவாஜிலிங்கத்துக்கும் வாக்களித்தனர்.
“இதன் பின்னர், டெலோவின் செயலாளர் நாயகம் சட்டத்தரணி சிறிகாந்தா, முதலமைச்சருக்கு உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டதன் மூலம், ஊடகங்களுக்கு விந்தனை அமைச்சராக்கப் பரிந்துரைப்பது பற்றிய தகவல் வெளியானது.
“இதன் பின்னர், இம்மாதம் ஓகஸ்ட் 20ஆம் திகதி வவுனியாவில் நடைபெற்ற டெலோவின் தலைமைக் குழுக்கூட்டத்திலும் 14 பேர் கலந்துகொண்டு விந்தனை அமைச்சராக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அம்முடிவும் முதலமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
“டெலோவின் பரிந்துரைகளும் முடிவுகளும் இவ்வாறாக இருக்கையில், முதலமைச்சர் குணசீலனை டெலோவின் விருப்புக்குப் புறம்பாக அமைச்சராக நியமிக்கின்றமை டெலோவுக்குள் கடும் அதிர்வலைகளையும் குழப்பத்தையும் ஏமாற்றத்தையும் தோற்றுவித்துள்ளது” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.