முதலமைச்சர் பாப்பாண்டவரின் பெயரை உவமைக்கு எடுத்துக் கொண்டமை கண்டிக்கத்தக்கது : சி.தவராசா

வட மாகாண சபையின் கையாலாகாத் தன்மைக்கு விடையளிக்கத் தெரியாமல் முதலமைச்சர் பாப்பாண்டவரின் பெயரை உவமைக்கு எடுத்துக் கொண்டமை கண்டிக்கத்தக்கது என வட மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார்.

தான் ஊடக விளம்பரத்திற்காகச் செயற்படுவதாக தெரிவித்து விடயத்தைத் திரிபுபடுத்த முதல்வர் முயன்றுள்ளதாகவும் அவர் நேற்றைய தினம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது செயற்பாடுகளை கத்தோலிக்க மக்களின் தலைவராகிய பாப்பாண்டவருடன் ஒப்பிட்டுப் பேசியது மட்டும்மல்லாமல் அவ்வாறு செய்வது ‘நல்லதல்ல’ எனவும் கூறியிருப்பது பாப்பாண்டவரின் செயற்பாடுகளை விமர்சனம் செய்வதாக அமைவதாகவும், ஆகவே முதலமைச்சரின் இந்த கூற்றுகள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தர்க்கத்தைத் தர்க்கத்தால் வெல்லுங்கள், நியாயத்தை நியாயமான செயற்பாடுகள் மூலம் வெல்லுங்கள் என்று பல தடவைகள் மாகாண சபையில் கூறியுளளதாக தெரிவித்துள்ள அவர், தர்க்கத்தை தர்க்கத்தால் வெல்ல முடியாத முதலமைச்சர் தனது செயற்பாடுகளுக்கு புதிய காரணங்களை கண்டு பிடித்து, அதனைப் பாப்பாண்டவரின் செயற்பாடுகளோடு ஒப்பிட்டு விமர்சித்திருந்தமைக்காக கிறிஸ்தவ மக்களிடம் மன்னிப்பு கேட்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை (17.08.2017) இடம்பெற்ற வட மாகாண சபை அமர்வின் போது எதிர்க் கட்சித் தலைவரை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கடுமையாக விமர்சித்ததோடு, அவர் பாப்பரசரின் பதிவுகள் போல கருத்துகளை வெளியிட்டு ஊடகளில் பிரபலம் தேடுவதாகவும் கூறியிருந்தமை குறிப்பிடதக்கது.

Related Posts