சம்பந்தனின் ‘தேசிய அரசு’ கருத்தில் எந்த முரண்பாடுமில்லை: மனோ கணேசன்

கிழக்கு மாகாண தேர்தலையடுத்து ஏற்பட்டுள்ள முறுகல் நிலை தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில், அக்கட்சியின் தலைவர் சம்பந்தன் எம்பி தெரிவித்த ‘தேசிய அரசு’ என்ற கருத்தை அரசியல்ரீதீயாக புரிந்துகொள்ளவேண்டும் என நான் நினைக்கின்றேன். சம்பந்தன் சிங்கள மொழியில் தெரிவித்த கருத்தை நான் தொலைகாட்சியில் பார்த்து, கேட்டேன். அதில் எந்த முரண்பாட்டையும் நான் காணவில்லை. 

உண்மையில் இந்த அரசாங்கத்துடன் இணைந்து ஒரு கூட்டாட்சியை, மாகாணத்திலோ அல்லது மத்தியிலோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமைக்கும் என்று, கூட்டமைப்பின் அரசியல் எதிரிகளும்கூட நம்ப மாட்டார்கள்.

உண்மையில் அங்கே சொல்லப்பட்ட கருத்து, அத்தகைய ஒரு ‘தேசிய அரசு’ யோசனை அரசின் உயர் தலைவரினால் நேரடியாக கூட்டமைப்பு தலைவருக்கு முன் வைக்கப்படுமானால், அது தொடர்பில் தமது நிலைப்பாட்டை அரச தலைவருக்கு தாம் தெரிவிப்போம் என்றே கூட்டமைப்பு தலைவர் சொன்னார் என நான் நினைக்கிறேன்.

அத்தகைய ஒரு சந்தர்ப்பம் ஏற்படுமானால், அரசு அதிபரிடம் தான் என்ன சொல்ல போகிறேன் என்பதையும் சுருக்கமாக ஊடகவியலாளரிடம் சம்பந்தன் தெரிவித்தார் என நான் நினைக்கிறேன். தாங்கள் முதலமைச்சர் பதவியையோ, அமைச்சர் பதவியையோ எதிர்பார்த்து அரசியல் செய்யவில்லை என்றும், அவை பற்றி அரசு தலைவரிடம் பேசும் எண்ணம் தமக்கு இல்லை என்பதையும் சம்பந்தன் சிங்கள மொழியில் சொன்னதை நான் கேட்டேன்.

தமிழர்களின் அபிலாஷைகளையும், இந்த கிழக்கு தேர்தலில் அரசுக்கு எதிராகவே தமிழ் பேசும் மக்கள் வாக்களித்துள்ளார்கள் என்பதையும், அப்படியான சந்தர்ப்பத்தில் சம்பந்தன் – அரசு தலைவருக்கு நேரடியாக சொல்ல நினைத்திருக்கலாம்.

எனவே இதை, ஏதோ அரசுடன் இணைந்து கூட்டாட்சி அமைக்க கூட்டமைப்பு இணக்கம் தெரிவித்ததாக மிகைப்படுத்தி அபிப்பிராயம் தெரிவிப்பது முறையில்லை. மேலும் இந்த அரசாங்கத்துடன் எப்போதும் பேச்சுவார்த்தை மூலமாக தீர்வுகாண தயாராக இருக்கின்றோம் என்று, நாட்டிற்கும் உலகத்திற்கும் தமிழ் தரப்பு தொடர்ந்து சமிக்ஞை காட்டி வர வேண்டும் என்பது எனது நிலைப்பாடு ஆகும்.

அங்கேபோய் அடிப்படை நிலைப்பாடுகளை விட்டுக்கொடுக்காமல் என்ன பேசுகிறார்கள் என்பதைத்தான் நாம் கவனிக்க வேண்டுமே தவிர, அறிவிப்புகளை வைத்துகொண்டு தீர்ப்பு வழங்க கூடாது என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் – ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Related Posts