காணாமல் போனோர் பிரச்சினை: தென்னிலங்கை மக்களை நம்பும் உறவினர்கள்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் உறவுகளைத் தேடும் முயற்சியில் இறங்கியுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், தமது இறுதி நம்பிக்கையாக தென்னிலங்கை மக்களை நாடியுள்ளனர்.

கடந்த பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம், 179வது நாளாகவும் நீடிக்கின்றது.

இந்நிலையில், கொழும்பிற்கு சென்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினர், இன்றைய தினம் விசேட செய்தியாளர் சந்திப்பொன்றையும் நடத்தினர்.

இதன்போது, தங்கள் உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டிருக்கிறார்களே தவிர அவர்கள் காணமல் போகவில்லை என்று சுட்டிக்காட்டிய அவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெயர் விபரங்களை வெளியிடுமாறும் கேட்டுக் கொண்டனர்.

அத்துடன், நல்லாட்சி என்று மார்த்தட்டும் அரசாங்கத்தின் ஜனாதிபதியாகட்டும், அமைச்சர்களாகட்டும், அவர்கள் வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்ற போதிலும், அவை நிறைவேற்றப்படுவதில்லை என்றும் கவலைத் தெரிவித்தனர்.

காணாமல் போனோர் குறித்து அறிவதற்காக, அமைக்கப்பட்டுள்ள காணாமல் போனோர் குறித்த அலுவலத்தின் மீது துளியளவேனும் நம்பிக்கை இல்லை என்று குறிப்பிடும், உறவினர்கள், தங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதிலும் உறுதியாய் இருக்கின்றனர்.

தங்கள் போராட்டத்தின் உண்மையான நியாத்தையும், உறவுகளைப் பறிகொடுத்த மக்களின் உள்ளக்குமுறல்களையும் தென்னிலைங்கை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும் என்றும், தென்னிலங்கை மக்களின் பலத்துடனும், ஒத்துழைப்புடனும் தங்கள் போராட்டத்திற்கும், தேடுதல்களுக்கும் ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என்றும், அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

Related Posts