இந்திய கிரிக்கட் அணியின் திறமையை குறைத்து மதிப்பிட முடியாது. இதேவேளை எமது கிரிக்கட் அணியில் இடம்பெற்றுள்ள தற்போதைய வீரர்களும் திறமைசாலிகளே. இவர்களையும் குறைத்து மதிப்பிட முடியாது .
இவர்கள் தவிர வேறுயாரும் இருப்பார்கள் என்று நான் நம்பவில்லை என்று அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் விளையாட்டுத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான தயசிறி ஜயசேகர தெரிவித்தார்.
இலங்கை கிரிக்கட் வீரர்கள் கடந்த டெஸ்ற் போட்டிகளில் மிக மோசமான தோல்வியை தழுவியிருப்பதாக செய்தியாளர் கேட்ட கேள்வியின் போதே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில் ,
கிரிக்கட் சபையிடம் இது தொடர்பில் அறிக்கையொன்றை கோரியுள்ளேன். இலங்கை கிரிக்கட் வீரர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளேன். இவர்களை வலுவூட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும் .
நிர்வாகிகள் தொடர்பில் செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் , இவர்கள் தேர்தல் மூலமே தெரிவுசெய்யப்பட்டனர். மாற்றங்களை மேற்கொள்வதாயின் மீண்டும் தேர்தல் நடைபெறவேண்டும். முன்னாள் கிரிக்கட் அணித்தலைவரும் தற்போதைய அமைச்சருமான அர்ஜுன ரணதுங்கவும் போட்டியிட்டு தோல்வியடைந்தார் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதேவேளை சர்வதேச கிரிக்கட்பேரவை டெஸ்ட் கிரிக்கட் அணித்தரப்படுத்தல் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்திய அணி தொடர்ந்தும் முன்னிலை வகித்து வருகின்றது. இலங்கை அணி 7ம் இடத்தை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.