சமூர்த்தி கொடுப்பனவு தொடர்பில் கனணி மூலம் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்த செயல்முறை நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான டொக்டர் ராஐித சேனாரட்ன தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிப்பதற்காக அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
கணனி மூலமான சமூர்த்தி பயனாளிகளிடம் சில வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. இதுதொடர்பிலான மதிப்பீடுகளை மேற்கொள்வதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சமூர்த்தி பயனாளிகளின் எண்ணிக்கையை குறைப்பதற்காக அல்ல என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.
இது தொடர்பில் நாம் கொள்கை ரீதியில் தீர்மானம் ஒன்றை மேற்கொண்டுள்ளோம். இது வரையில் வழங்கபட்ட சமூர்த்தியாளர்களுக்கு தொடர்ந்தும் சமூர்த்தி நிவாரணம் வழங்கப்படும் எந்தவித குறைப்பும் மேற்கொள்ளப்படமாட்டாது. மாறாக இதுவரை சமூர்த்தி நிவாரணம் பெறாதவர்கள் இருப்பார்களாயின் நாம் அவர்களையும் உள்வாங்க தீர்மானித்துள்ளோம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதேவேளை அமைச்சரவை தீர்மானங்களை அறிவித்த பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் காணி அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான கயந்த கருணாதிலக நேற்று அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை அறிவித்தார்.
சமூர்த்தி மானியங்கள் பெறும் சிலரின் சமூர்த்தி மானியக்கொடுப்பனவு நீக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தவறான ஊடகச்செய்தி காரணமாக தவறான கருத்துக்கள் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
எவ்வித சமூர்த்தி மானியங்கள் பெறுபவர்களின் கொடுப்பனவுகளை நிறுத்துவதற்கோ அல்லது வெட்டி விடுவதற்கோ அரசாங்கத்தினால் எந்த விதமான தீர்மானமும் மேற்கொள்ளப்பட வில்லை என்பதுடன், அது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கடந்த தினமொன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கயந்த கருணாதிலக மேலும் சுட்டிக்காட்டினார்.