அமைச்சராக பொறுப்பெடுத்துள்ள நிலையில் பல்வேறு சவால்களிற்கு முகம் கொடுத்து வருவதுடன், வழங்கப்பட்ட அமைச்சுப் பதவியும் எப்போது பறிக்கப்படும் என்ற அச்சமும் உள்ளதாக வட மாகாண மகளிர் விவகாரம், சமூக சேவைகள், புனர்வாழ்வு மற்றும் கூட்டுறவு அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற சர்வதேச கூட்டுறவு தின நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நான் ஒரு பெண்ணாக சாதிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களிற்கு எவ்வாறு உதவலாம் என்பது தொடர்பில் இன்று அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்களுடன் கலந்துரையாடியுள்ளேன்.
யுத்த காலத்தில் கூட்டுறவுப் பணியாளர்களின் பங்கு அளப்பரியதாக இருந்தது. யுத்தம் இடம்பெற்ற சூழலில் காயமுற்றவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் என பலருக்கும் பல்வேறு உதவிகள் இந்த கூட்டுறவு சங்கங்களால் முன்னெடுக்கப்பட்டன.
குறிப்பாக வடக்கில் கூட்டுறவு சங்கங்கள் மிகவும் சிறப்பாக இயங்கியிருந்தன” என அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், கூட்டுறவு ஆணையாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது கூட்டுறவு தினப்போட்டியில் பங்குபற்றி வெற்றி பெற்ற மாணவர்களிற்கு பரிசில்கள் வழங்கப்பட்டதுடன், கூட்டுறவுப் பணியில் ஈடுபட்டவர்கள் கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.