எந்த நம்பிக்கையுடன் வடக்கு மாகாணசபை உருவாக்கப்பட்டதோ அந்த நம்பிக்கையை சிதறடிக்கும் வகையில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் செயற்படுகின்றார் என வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
வவுனியா சேமமடு கிராமத்தில் நேற்று (திங்கட்கிழமை) கிராமிய வைத்தியசாலைக்கான அடிக்கல் நட்டும் நிகழ்வில் அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “எங்களுடைய மாகாணத்தில் புதியவர்கள் அரசியலுக்கு வருவதும் ஊரில் இருந்து ஒருவர் அரசியலுக்கு வருவதும் படித்தவர்கள் வருவதும் பலருக்கு பிரச்சனையாக உள்ளது.
எமது முதலமைச்சர் இந்த விடயங்களை விளங்கிக் கொள்ளாமல் சிலர் கூறுகின்ற கருத்துக்களை கேட்டு எங்களை நம்பவில்லை. தேவையில்லாத பிரச்சினைகளை உருவாக்கி நாங்கள் எங்கள் அமைச்சுக்களை இராஜினாமா செய்துவிட்டு போகும் அளவிற்கு கொண்டு வந்து விட்ட முழுப்பொறுப்பும் முதலமைச்சரையே சாரும்.
நெதர்லாந்து நாட்டின் மூலம் என்னால் பெறப்பட்ட 1,400 கோடி ரூபாவுக்கான வேலைகள் நடைபெறாது விட்டால் அதற்கான முழுப்பொறுப்பையும் முதலமைச்சர் ஏற்கவேண்டும்.
திறமையான அமைச்சர்கள் வந்து வேலைகளை செய்வார்கள் என எதிர்பார்க்கின்றேன். அந்த அமைச்சர்களும் இதனை செய்யாவிட்டால் அந்த பொறுப்பையும் முதலமைச்சர் தனது தலையில் தூக்கி வைக்கவேண்டும். அவர் அதனை தூக்கி தனது தலையில் வைப்பார் எனறே நினைக்கின்றேன்.
யுத்ததில் பாதிக்கப்பட்ட மக்கள் இனியாவது அடிப்படை வசதிகளுடன் வாழக்கூடிய வழியை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டிய பொறுப்பு முதலமைச்சருக்கும் அமைச்சர்களுக்கும் உள்ளது. எங்கு தலைமைத்துவம் பிழைக்கின்றதோ அங்கு எல்லாம் பிழைக்கும் அதுவே எங்கள் மாகாணத்திலும் இடம்பெறுகின்றது.
முதலமைச்சர் மீண்டும் மீண்டும் பிழையான முடிவுகளை எடுத்து எந்த நம்பிக்கையுடன் வடக்கு மாகாணசபை உருவாக்கப்பட்டதோ அந்த நம்பிக்கையை சிதறடிக்கும் வகையில் முதலமைச்சர் செயற்பட்டமை மிகவும் மனவேதனைக்குரியது. தனிப்பட்டவர்கள் வரலாம் போகலாம். ஆனால் இயற்கையின் விதிபடி இந்த மக்களுக்கு நல்லதே நடக்கும்.” என அவர் தெரிவித்துள்ளார்.