வடக்கு மாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சிப்பொறுப்பில் இருந்து தான் ஒரு போதும் சுய விருப்பத்துடன் பதவி விலகப்போவதில்லை என்றும், கட்சியோ முதலமைச்சரோ தனக்கு பெரியவர்கள் இல்லை என்றும் அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அமைச்சுப் பதவியில் இருந்து விலகுமாறு டெனிஸ்வரனுக்கு டெலோ அறிவித்திருந்த நிலையில், அவரது நிலைப்பாடு குறித்து நேற்று (திங்கட்கிழமை) மன்னாரில் உள்ள அமைச்சரின் உபஅலுவலகத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 12 ஆம் திகதி சனிக்கிழமை டெலோவின் உயர் மட்டக்கூட்டம் வவுனியா அலுவலகத்தில் இடம்பெற்ற போது, அமைச்சுப் பதவியில் இருந்து தன்னை விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாகவும் தான் விலக போவதில்லை என்ற நிலைப்பாட்டை வெளிப்படுத்தியதாகவும் அவர் கூறினார்.
தனது சுய விருப்பதின் பேரில் இராஜினாமா கடிதத்தை கொடுத்தால் எதிர்காலத்தில் சில நடவடிக்கைகளை எடுப்பதற்கும்,பலரது போலி முகத்திரையினை கிழிப்பதற்கும் முடியாமல் போய்விடும் எனவும் கட்சியாலும்,முதலமைச்சராலும் முடியுமானால் தன்னை அமைச்சு பதவியில் இருந்து நீக்குமாறும் சூளுரை விடுத்துள்ளார்.