சிறையில் பரீட்சை எழுதும் ஆவா குழுவினர்!

ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் இரண்டு பேர், சிறைச்சாலையில் இருந்து கொண்டு, க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி வருவதாக, யாழ்ப்பாணம் சிறைச்சாலை உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.

பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் அன்மையில் கைது செய்யப்பட்ட ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் இரண்டு பேர், க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர். யாழ்ப்பாண சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்புடன் இவர்கள் பரீட்சைக்குத் தோற்றி வருகின்றனர்.

யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இரண்டு பேர் மீது வாள்வெட்டு நடத்திய குற்றச்சாட்டில், இம்மாதம் 9ஆம் திகதி கைதான இருவரே இவ்வாறு பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர்.

குறித்த இருவரும் வணிகப் பரிவில் பரீட்சைக்குத் தோற்றி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. வட மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் றெஷான் பெர்ணான்டோவின் பணிப்புரைக்கு அமைய, சிறைச்சாலை அதிகாரிகள் நீதிமன்றில் விடுத்த கோரிக்கையை அடுத்து, இவர்கள் இருவரும் பரீட்சைக்குத் தோற்ற அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சந்தேக நபர்கள் இரண்டு பேரையும், இம்மாதம் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts