அபிவிருத்தி நிதி திரும்பிச் சென்றால் முதலமைச்சரே பொறுப்பு: டெனிஸ்வரன்

வடமாகாணத்திற்கு அபிவிருத்தி திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி திரும்பிச்செல்கின்ற அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவ்வாறு நிதி பயன்படுத்தப்படாமல் திரும்புமாயின் அதற்கான முழுப்பொறுப்பையும் முதலமைச்சரே பொறுப்பேற்க வேண்டும் என வடக்கு மாகாண அமைச்சர் டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கடந்த கால வரலாறுகளில் வடமாகாண சபைக்கு அதன் அபிவிருத்தி திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் வெளியீடும் அதன் பயன்பாடும் எவ்வாறு இருந்ததென்பதை மக்களும் நன்கு அறிவீர்கள் என நம்புகின்றேன்.

அந்தவகையில் தற்பொழுது காணப்படுகின்ற இவ் அசாதாரண அரசியல் சூழ்நிலைகளை முதலமைச்சர் அவர்கள் உடனடியாக முடிவுக்கு கொண்டுவந்து ஒரு நேர்த்தியான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து செல்லவேண்டும்.

விரைவாக உரிய அமைச்சர்களை நியமித்து மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியினை சரியாக பயன்படுத்துவதன் மூலமே எமது மக்களின் வாழ்வாதரத்தினை ஓரளவுக்கேனும் உயர்த்த முடியும்.

தூரநோக்கோடு சிந்தித்து முதலமைச்சர் அவர்கள் செயற்படுவார்களாயின் அதனை முழுமனதோடு நான் வரவேற்கின்றேன்.

எனவே பதவி ஆசை மற்றும் சுயநல அரசியலுக்குள் நாம் விழுந்துவிடாது மக்களின் நலனே முக்கியமென செயற்படவேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கின்றோம்” என அமைச்சர் டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Related Posts