சுன்னாகம் பகுதியில் கடந்த 2016 ஆம் ஆண்டு சிவில் உடையில் கடமையில் இருந்த உளவுத் துறை பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் மீது வாள் வெட்டுத் தாக்குதலை நடத்திய குழுவினரில் இருந்ததாக கூறப்படும் மூன்று ஆவா குழு சந்தேக நபர்களை சுன்னாகம் பொலிஸார் நேற்று கைது செய்தனர்.
கொக்குவில் பகுதியில் பொலிஸார் இருவரை வெட்டி காயப்படுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள ஆவா குழுவின் தலைவன் நிஷா விக்டர் உள்ளிட்ட ஏழு பேரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களுக்கு அமையவே நேற்று இம்மூவரையும் கைது செய்ததாக வட மாகாண பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.
மானிப்பாயில் வைத்து ஒருவரையும் மற்றையவரை சுன்னாகத்தில் வைத்தும் கைது செய்ததாகவும் அவர்களை இன்று மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும் அந்த தகவல்கள் உறுதி செய்தன.
கடந்த 2016.10.23 அன்று யாழ். சுன்னாகம் பகுதியில் சிவில் உடையில் கடமையில் இருந்த உளவுத் துறை பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் மீது வாள் வெட்டுத் தாக்குதல் நடாத்தப்பட்டது. இதனை அடுத்து தேசிய உளவுத் துறை பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நலிந்த ஜயவர்தனவின் ஆலோசனைக்கு அமைய அமைக்கப்பட்ட தேசிய புலனாய்வுப் பிரிவின் உளவுத் துறை அதிகாரிகள் அடங்கிய விசாரணைக் குழுவின் உதவியுடன், பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு விசாரணைப் பிரிவு 13 சந்தேக நபர்களை அப்போது பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்தது.
எனினும் பின்னர் அவர்கள் மீதான பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்டு தடைசெய்யப்பட்ட கத்திகள் தொடர்பிலான கட்டளைச் சட்டம் அமுல் செய்யப்பட்டது. இந் நிலையில் அந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என அடையாளம் காணப்பட்ட ஆவா குழுவின் அப்போதைய தலைவன் தேவா உள்ளிட்டோர் தலைமறைவான நிலையில் அது தொடர்பிலான விசாரணைகள் தொடர்கின்றன..
இந் நிலையிலேயே தற்போது கைது செய்யப்பட்டுள்ள ஆவா குழுவை வழி நடத்தும் விக்டர் உள்ளிட்டோர் விசாரணையில் வழங்கிய தகவல்களுக்கு அமைய தலைமறைவாகியிருந்த குறித்த
உளவுத் துறை பொலிஸார் மீதான தாக்கு தலுடன் தொடர்புடைய மூவரும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.