யாழ். கோப்பாய் பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சந்தேகத்தின் பேரில், மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
யாழ்.பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் இன்று (வியாழக்கிழமை) இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
யாழ். நல்லூர் அரசடி வீதியைச் சேர்ந்த முத்து எனப்படும் யோகராசா சதீஸ் மற்றும் கோப்பாய் பகுதியைச் சேர்ந்த அருள்சீலன் பிரட்றிக் தினேஸ் ஆகிய இருவமே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, அதனைத் தொடர்ந்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக யாழ். பாதுகாப்புப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
யாழ். கோப்பாய் பகுதியில் கடந்த 30ஆம் திகதி இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பாக, ஏற்கனவே இருவர் கைதுசெய்யப்பட்டு எதிர்வரும் 10ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர்களது உறவினர்களின் வேண்டுகோளின் பிரகாரம் அவர்களது சொந்த பிரதேச வைத்தியசாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இவ் வாள்வெட்டுச் சம்பவத்துடன் 10 பேர் தொடர்புபட்டுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார், ஏனையோர் விரைவில் கைதுசெய்யப்படுவர் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.