நல்லூரிலிருந்து சிவனொளிபாதமலைக்கு யாத்திரை சென்ற பக்தர்களுக்குப் பொலிஸாரால் இடையூறு ஏற்படுத்தப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கண்டனம் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரியும் அரச தலைவர், தலைமை அமைச்சர் உள்ளிட்ட12 தரப்பினருக்கு இந்து சமயத் தொண்டர் சபை கடிதம் அனுப்பியுள்ளது. அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது:
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து கடந்த ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி 45 சிவனடியார்கள் சிவனொளிபாத மலை நோக்கி மாலை 6 மணிக்கு சின்மயாமிஷன் சுவாமிகளுடன் பாதயாத்திரை ஆரம்பித்தது.
இலங்கை மலையக இந்து குருமார் ஒன்றிய பொதுச் செயலாளர் சிவஸ்ரீ வேலு சுரேஸ்வரக்குருக்களின் ஒழுங்கமைப்புக்கு அமைய ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி அதிகாலை.3.30 மணிக்கு சிவனொளிபாத மலையில் சிவனின் பாதம் தரிசிக்க ஓம் நமசிவாய என்ற மந்திரம் முழங்க அரோகரா என்ற அருள் முழக்கத்துடன் சிவனின் ஊர்தி நந்தியெம் பெருமானின் உருவம் பொறித்த கொடியை ஏந்தியவாறு யாத்திரை ஆரம்பிக்கப்பட்டது.
இடையிடையே ஓம் நமசிவாய சொல்வதற்கும் நந்திக் கொடி ஏந்திச் செல்வதற்கும் ஒரு சிலரால் இடை யூறுகள் ஏற்படுத்தப்பட்டன. அதைக் கருத்தில் கொள்ளாது சிவசிந்தையுடன் யாத்திரையை பக்தர்கள் தொடர்ந்தனர்.
சிவனொளிபாத மலையை அடைந்ததும் காலை 8.30 தொடக்கம் 9.30 மணிக்குமிடையில் அங்கு கடமையில் இருந்த பொலிஸாரும் ஒரு மதகுருவும் யாத்திரைக்குச் சென்றவர்களை அழைத்து இங்கு ஓம் நமசிவாய சொல்லக்கூடாது, நந்திக்கொடி பிடிக்க்ககூடாது உடனே சுருக்குங்கள் என்றும் நந்திக் கொடியுடன் எடுத்த படத்தை கைத்தொலைபேசியில் இருந்து உடனே அழிக்குமாறும் கட்டளையிட்டு அழிப்பித்தார்கள்.
யாத்திரைக்குச் சென்றவர்களின் வேட்கைகள் நிறைவு செய்யப்படவில்லை. முன்னோர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பின்பற்றிய வழிகளை யாத்திரைக்குச் சென்றவர்கள் பின்பற்ற விரும்புகின்றனர்.
சமயம் சார்ந்த அமைச்சுக்கள் குருமார்களுக்கும் இந்த விடயத்தை தெரியப்படுத்துகின்றோம். உரி நடவடிக்கை எடுக்குமாறு கோருகிறோம் என்று இந்து சமயத் தொண்டர் சபை தெரிவித்தது.