“இன்று பலரும், நுண் நிதிக் கடன்களைப் பெற்று, வீட்டில் தொலைக்காட்சிகளையும் டிஸ் அன்டனாக்களையும் பொருத்துவதில் ஆர்வம் காட்டுகின்றனர். இதனை விட, வீட்டுக்கொரு வடிகட்டும் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்களைப் பொருத்துவதன்மூலம், சுத்தமான குடிநீரைப் பருகமுடியும்” என்று, வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
வவுனியா தாலிக்குளம் அ.த.க பாடசாலையில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை, மாணவர்களின் பாவனைக்குக் கையளிக்கும் நிகழ்வு, நேற்று (31) நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
“தற்போது, தொற்றாத நோயின் தாக்கம், எமது நாட்டிலும் உலகளாவிய ரீதியிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. அதிலும் குறிப்பாக, நாள்பட்ட சிறுநீரக நோய்த் தாக்கமுடையவர்கள், அண்மைக்காலமாக அதிகளவில் இனங்காணப்பட்டுள்ளனர்.
“இலங்கையில் எட்டு மாவட்டங்கள், அதிகளவிலான சிறுநீரக நோயாளர்களைக் கொண்ட மாவட்டங்களாக இனங்காணப்பட்டுள்ளன. அதில், எமது மாகாணத்தில் வவுனியா மாவட்டமும் முல்லைத்தீவு மாவட்டமும், அதிகளவிலான நோயாளர்களை கொண்ட மாவட்டங்களாக அடையாளங்காணப்பட்டுள்ளன.
“இதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், சுத்தமான குடிநீர் பருகாமையும், ஒரு காரணமாகக் கருதப்படுகின்றது. இதற்கமைய, சிறு வயதிலிருந்தே சுத்தமான குடிநீரைப் பருகுவதை ஊக்குவிக்கும் வகையில், பாடசாலைகளில் இவ்வாறான இயந்திரங்களைப் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளேன்” என்றார்.