யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மீதான துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டவர் அவரைக் கொலை செய்வதற்காகவே வந்தார் என வட.மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார்.
யாழ்.மாவட்ட பாதுகாப்புப் படைப் பிரிவின் ஏற்பாட்டில் சாதாரண தர பரீட்சையில் அதி உயர் புள்ளிகளைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (சனிக்கிழமை) யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. அங்கு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
”நான் தொலைக்காட்சியில் பார்த்தேன், மா.இளஞ்செழியன் உயிரிழந்த பொலிஸாரின் மனைவியைப் பார்த்து கும்பிடுகிறார். பொலிஸாரின் பிள்ளைகளை தத்தெடுப்பதாக சொல்லியிருக்கின்றார்.
அவருக்கு நான் நன்றி செலுத்த வேண்டும். அதனைப் பார்த்த தென்னிலங்கை மக்கள் இப்படி ஒரு தமிழ் மக்கள் இருக்கின்றார்களா என கேட்கின்றார்கள்.
யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனைச் சுட வந்தவன் அவரைக் கொலை செய்யவே வந்தான். அவரைக் காப்பாற்றவே அவரது மெய்ப்பாதுகாவலா் தன்னுடைய உயிரைக்கொடுத்தார்.
அங்கு இன, மத மொழி, எதுவும் இல்லாமல் இருந்தது. அவ்வாறு தான் கல்வி கற்பிக்கும் போதும் மாணவர்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும். அதனாலேயே இந்த நாட்டிற்கு சிறந்த காலம் வரும்” என வட.மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார்.