’வடக்கு மாகாண சபையில் எமக்கான சந்தர்ப்பம் மறுக்கப்பட்டுள்ளது’ : த.சித்தார்த்தன்

வடக்கு மாகாண சபை தேர்தல் முடிவுகளின் பிரகாரம், சுழற்சி முறையில் ஒவ்வொரு பங்காளிக் கட்சிக்கும் வழங்கப்பட்டுவந்த வாய்ப்பு, தமது கட்சிக்கு மறுக்கப்படுவதாக ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) தலைவர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தனுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது,

“வடக்கு மாகாண சபை தேர்தல் முடிவுகளின் பிரகாரம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைக்கப்பெற்ற இரண்டு மேலதிக ஆசனங்களில் ஒன்றுக்கு, சுழற்சி முறையில் ஒவ்வொரு பங்காளிக் கட்சிக்கும் வழங்கப்பட்டுவந்த வாய்ப்பு எமது கட்சிக்கு மறுக்கப்படுவதை தங்களின் கவனத்துக்கு அவசரமாக கொண்டுவர விரும்புகிறேன்.

வட மாகாணசபைத் தேர்தல் நடந்துமுடிந்தவுடன் இடம்பெற்ற, கூட்டமைப்பில் அங்கம் வகித்த கட்சிகளுக்கிடையேயான கூட்டத்தில், கிடைத்த மேலதிக ஆசனங்களில், ஓர் ஆசனமானது, நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் முஸ்லிம் ஒருவருக்கு வழங்கப்படுமென தாங்கள் எடுத்த முடிவுக்கு அமைய, அஸ்மினுக்கும் மற்றயது ஒவ்வோர் கட்சியையும் ஒரு வருடம் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சுழற்சி முறையில் வழங்குவதெனவும், அதனடிப்படையில் ஐந்தாவதும் இறுதியுமான வருடத்தில் அவ்வாசனம் புளொட் அமைப்புக்கு வழங்கப்படுமெனவும் முடிவுசெய்யப்பட்டு ஐந்து கட்சிகளும் இதற்கு சம்மதித்திருந்தன.

மேலதிக ஆசனமாக கிடைத்த ஆசனம், நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் முஸ்லிம் ஒருவருக்கு வழங்குவதாக கூறப்பட்டிருந்தாலும், பதவியைப் பெற்றுக்கொண்ட அஸ்மின் தமிழரசுக் கட்சி அங்கத்தவர் போன்றே செயற்பட்டார். இறுதியாக நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் இளைஞரணி மாநாட்டில் கலந்துகொண்டு தொடர்ந்து தமிழரசுக் கட்சி அங்கத்தவராக செயற்படுகின்றார்.

மாகாண சபை தேர்தல் முடிவடைந்த பின்பு கூட்டமைப்பின் செயற்பாடுகளில் இருந்து தமிழர் விடுதலைக் கூட்டணி விலகிய நிலையில், கூட்டணியின் மாகாணசபை உறுப்பினர்களும், வேட்பாளர்களும் தமிழரசுக் கட்சியை தழுவி செயற்படலாயினர்.

அந்தவகையில், முதல் வாய்ப்பைப் பெற்ற மேரிகமலா தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் போட்டியிட்டிருந்தாலும் தமிழரசு கட்சி உறுப்பினராக செயற்பட்டதோடு, ஒன்றரை வருடகாலத்துக்கு மேலாக மாகாணசபை உறுப்பினராக இருந்தார்.

பதவிக்காலத்தின் ஒரு வருட முடிவில் தற்போது மாகாணசபை உறுப்பினர் செ. மயூரன் பதவிநீக்கும் விடயத்தில் காட்டும் தீவிரத்தை மேரிகமலாவை பதவிநீக்குவதில் தமிழரசுக் கட்சி காட்டியிருக்கவில்லை. தற்போது மேரிகமலா, தமிழரசுக் கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட கிளையின் உப தலைவராக செயற்பட்டுவருவதும் குறிப்பிடத்தக்கது.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் வேட்பாளரான மாகாணசபை உறுப்பினர் செ.மயூரனுக்கு மூன்று மாத கால நீடிப்பு வழங்குமாறு கோரியதாகவும் அதற்கு சாதகமான பதிலை தமிழரசுக் கட்சி வழங்கியிருந்ததாகவும் தமிழீழ விடுதலை இயக்கத்தினர் எனக்கு தெரியப்படுத்தியிருந்தார்கள்.

ஆயினும், ஜே.ஆரின் பாணியில் பதவிவிலகல் கடிதத்தினை ஏற்கனவே வாங்கி வைத்திருந்த தமிழரசுக்கட்சி, பதவியிலிருந்த மாகாணசபை உறுப்பினர் செ.மயூரனுக்கு தெரியாமலேயே அவரது பதவிவிலகல் கடிதத்தை தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பிவைத்ததுடன், அவ்விடத்துக்கு அவசர அவசரமாக ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியின் வேட்பாளரான ஜெயசேகரத்தைநியமித்து ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சிக்கு இரண்டாவது தடவையாகவும் சந்தர்ப்பம் வழங்கியுள்ளனர்.

ஏற்கெனவே வட மாகாணசபையின் முல்லை மாவட்ட உறுப்பினராகவிருந்த கனகசுந்தரசுவாமியின் மறைவையடுத்து பதவி வெற்றிடமாகியபோது, அடுத்த நிலையில் இருந்த எமது அமைப்பின் க.சிவநேசனின் பெயரை, பலமுறை நாம் சுட்டிக்காட்டியிருந்தபோதிலும்கூட, தேர்தல் அலுவலகத்துக்கு தெரிவிக்காமல் மூன்று மாதகாலமாக தமிழரசுக் கட்சி இழுத்தடிப்பு செய்துவந்தது.

இறுதியாக தேர்தல் ஆணையாளரே தனது பதவிக்குரிய அதிகாரவழியில் தற்துணிவுடன் சிவநேசனின் உறுப்புரிமையை அறிவித்திருந்தார். கூடவே, தமிழரசுக்கட்சியின் செயலாளரின் பொறுப்பற்றதன்மையை தேர்தல் ஆணையாளர் சுட்டிக்காட்டியிருந்தார்.

கூட்டமைப்பைப் பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் தமிழரசுக் கட்சியினால் திட்டமிட்டு புறம்தள்ளப்பட்டு வருகின்ற சூழலில், ஒற்றுமை ஒன்றையே அடிப்படையாக கருதி தமிழரசுக்கட்சியின் அடையாளத்தையும், பெயரையும் நாம் தொடர்ச்சியாக ஏற்றுக்கொண்டு செயற்படுவதனால் ஏற்படுகின்ற பாதகமான விளைவாகவே தற்போதைய நிலைமையை நாம் பார்க்கிறோம்.

ஓற்றுமைக்கான விலையான எமது விட்டுக்கொடுப்புகளை எமது பலவீனமாக கருதும் செயற்பாடுகள் கண்ணியமானவையோ, அரசியல் நாகரீகம் நிறைந்தவையோ அல்லது தமது பலம் என்று பெருமை கொள்ளக்கூடியவையோ அல்ல.

கூட்டான ஓர் அமைப்புக்குரிய அடிப்படைப் பண்புகளை தூக்கிநிறுத்தி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஐக்கியத்தை கட்டிக்காக்க வேண்டிய கடப்பாடு தஙகளையே சாரும் என நம்புகிறேன்.

எனவே, தமிழரசுக் கட்சியின் மிக மூத்ததலைவர் என்றவகையிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சிதறடித்துவிடாது இணைத்துவைத்திருக்கும் ஆற்றல்கொண்ட தலைவர் என்றவகையிலும் தமிழரசுக்கட்சியின் மிகப் பிந்திய செயற்பாடான ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சிக்கு சுழற்சி முறையிலான ஆசனத்தை முறைகேடாக இரண்டாவது தடவையும் வழங்கும் நடவடிக்கையை உடன் தடுத்து நிறுத்துமாறு உரிமையுடனும், ஒற்றுமையின் பெயரிலும் தங்களிடம் கேட்டுக் கொள்கிறேன்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts