2013 செப்டெம்பரில் வடமாகாண சபை தேர்தல் நடைபெறுமென தனக்கு கூறப்பட்டதாகவும், ஆனால் அதற்கு முன் விரைவாக அத்தேர்தல் நடைபெறுமென தான் நம்புவதாகவும், இத்தேர்தலை விரைவாக நடத்த தான் வலியுறுத்தியதாகவும் ரொபேட் ஒ பிளேக் தெரிவித்தார்.இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட அமெரிக்காவின் தெற்காசிய விவகாரங்களுக்கான செயலாளர் ரொபேட் ஓ பிளேக் இன்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கில் இராணுவ பிரசன்னம் குறைக்கப்பட வேண்டுமெனவும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை அமுல்படுத்துவது துரிதப்படுத்தப்பட வேண்டும்.
யுத்தம் முடிவுக்கு வந்து மூன்று வருடங்களுக்கு மேலாகிவிட்ட நிலையில், முக்கியமான மனித உரிமை பிரச்சினைகள் தொடர்பான நேர்மையான தேடுதல்கள், விசாரணைகள், வழக்குகள் நடந்திருக்க முடியும்.
காணாமல் போனவர்கள் தொடர்பிலும் முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்க வேண்டும்.
வடக்கில் இராணுவ பிரசன்னம் குறைக்கப்பட வேண்டுமெனவும், மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளேன்.
அரசாங்கத்துடன் பேசும் போதும், மனித உரிமைகள் தொடர்பான அனைத்துலக ஆவர்த்தன மதிப்பீட்டின் போதும் இந்த பிரச்சினைகளுக்கு அமெரிக்கா முக்கியத்துவம் கொடுக்கும்.
காணாமல் போனவர்கள் உட்பட மனித உரிமை பிரச்சினைகளிலும் ஊடக சுதந்திரத்திலும் அமெரிக்கா கூடுதல் கவனம் செலுத்தும்.
எனவே, அனைத்துலக ஆவர்த்தன மதிப்பீட்டிலும் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகளிலும் இவ்விடயங்கள் முன்னுரிமை பெறும் என அவர் கூறினார்.
அரசாங்கத்துக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தை முறிவடைந்ததையிட்டு அவர் தனது கவலையை தெரிவித்தார். இந்த பேச்சுவார்த்தை மீண்டும் விரைவில் தொடங்குவதை நாம் ஊக்குவித்தோம் என அவர் கூறினார்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை தொடர்பான வேலைத்திட்டத்தை விரைவில் செயற்படுத்த வேண்டுமென அவர் கோரினார். இதற்கு 5 வருட காலம் தேவை என்பது ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதா என்பது தொடர்பில் அவர் கருத்து கூற மறுத்துவிட்டார்.
அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், சிவில் சமூக அங்கத்தவர்களுடன் பரந்துபட்ட விடயங்கள் பற்றி ஆக்கபூர்வமான முறையில் பேசியுள்ளேன்.
வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், அமைச்சர் சமரசிங்க, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் மற்றும் சிவில் சமூகத்துடனும் சிறந்த முறையில் பேசியுள்ளேன் என்றும் அவர் தெரிவித்தார்.