நாளை கண்டனப் பேரணி!

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தை கண்டித்து, வடக்கு கிழக்கில், நாளை செவ்வாய்க்கிழமை காலை 9:30க்கு கண்டனப் பேரணிகள் இடம்பெறவிருக்கின்றன.

இந்தக் கண்டனப் பேரணிகளை வடக்கு, கிழக்கு ஒருங்கமைப்புக் குழு ஏற்பாடு செய்துள்ளது. அந்தக் குழு அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில், மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

யாழ்ப்பாணம் நல்லூர்ப்பகுதியில் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி அவர்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை, மிகமிக வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

இச் சம்பவமானது நீதித்துறைக்கு மட்டுமன்றி நீதியை நிலைநாட்ட விளையும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள், மனிதஉரிமை ஆர்வலர்கள், சிவில் அமைப்புக்கள், ஊடகவியலாளர்கள் போன்றோருக்கும் விடுக்கப்பட்ட ஓர் அச்சுறுத்தலாகவே பார்க்கப்பட வேண்டியுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீதிமன்ற நீதிபதி அவர்கள் சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்தி நீதியை நிலைநாட்ட எடுத்துவரும் அண்மைக்கால முயற்சிகள் பாதிக்கப்பட்ட சமூகத்தின் மத்தியில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி இருந்தது.

அவர், இன்று கண்கலங்கி நிற்பதானது ஒட்டு மொத்த நீதித்துறையின் மீதுவிழுந்தபேரிடி என்றே கருதுகின்றோம். இத் தாக்குதல் சம்பவமானது நன்கு திட்டமிடப்பட்டு நடாத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தினையே காட்டிநிற்கின்றது.

இதன் மூலம் இலங்கையில் மனித உரிமைகளை மேம்படுத்தவும் செயற்படும் செயற்பாட்டாளர்களின் பாதுகாப்பு கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளது.

இத்தாக்குதல் குறித்து இலங்கை அரசானது பல் கோணங்களில் விசாரணை நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த அநீதிக்கெதிராக வீதிகளில் இறங்கி மக்கள் குரல் கொடுக்கவேண்டும்.
அதனடிப்படையில, பேரணிகள் ஆரம்பமாகும் இடங்கள்:-

1. அம்பாறை:-கல்முனை மனித உரிமை ஆணையகத்துக்கு அருகாமையில்.
2. மட்டக்களப்பு:- காந்திபூங்கா
3. திருகோணமலை:-கிழக்குமாகாண ஆளுனர் அலுவலகத்துக்கு அருகாமையில்
4. மன்னார்:-கச்சேரிக்கு அருகாமையில்
5. வவுணியா:-கச்சேரிக்கு அருகாமையில்
6. கிளிநொச்சி:-டிப்போசந்தி
7. முல்லைத்தீவு:-கச்சேரிக்கு அருகாமையில்
8.யாழ்ப்பாணம்- கச்சேரிக்கு அருகாமையில்.

Related Posts