கௌரவ அவைத் தலைவர் அவர்களே, எமது சபையின் நூறாவது அமர்வுக்கு முன்பாக இன்றைய 99வது அமர்வில் வட மாகாண சபையின் ஆயுட் காலத்திற்கு இன்னும் பதினைந்து மாதங்களே இருக்கின்ற நிலையில் கடந்த கடந்த மூன்று வருடம் 9 மாதத்தில் ஒட்டு மொத்த வட மாகாண சபையின் செயற்பாடுகளை மீளாய்வு செய்வதற்கு வாய்ப்பளித்தமைக்கு முதலில் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.
மீளாய்வென்பது, கௌரவ அவைத் தலைவர் அவர்களே, ஏதோ அரசினால் தரப்படும் மூலதன செலவினத்திற்கான அற்ப சொற்ப நிதியை ஏதோ செலவழித்தோம் என்று கணக்குக் காட்டுவதோ அல்லது 32,000 ஊழியர்களிற்கு மாதாந்தம் சம்பளம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகளைச் செலுத்தி விட்டோம் என்பதல்ல. அவ்வாறு செய்வதற்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஓர் மாகாண சபை தேவையில்லை. ஆளுநரிற்குக் கீழிருந்தது போன்ற ஓர் நிர்வாகக் கட்டமைப்பு இருந்திருந்தாற் போதும்.
நான் மீளாய்வு செய்ய இருப்பது, கௌரவ அவைத் தலைவர் அவர்களே, இந்த 32,000 வட மாகாண சபை ஊழியர்கள் மூலம் மக்களிற்குச் சரியான சேவை கிடைக்கப் பெற்றுள்ளதா? அவ்வூழியர்களில் 50%இற்கு மேற்பட்டவர்கள் கல்வித்துறையைச் சார்ந்தவர்கள். இவர்களைத் திறன்பட செயற்பட வைத்து எமது கல்வியை மேம்படுத்தியிருக்கின்றோமா? அரசு தருகின்ற நிதிக்கு மேலதிகமாக எமது பிரதேசத்தின், எம் மக்களின் பொருளாதார வளத்தை, வாழ்வாதார வாய்ப்புகளை மேம்படுத்த ஏதாவது செய்திருக்கின்றோமா? போன்ற விடயங்களையே.
முதலில் கௌரவ அவைத்தலைவர் அவர்களே வடமாகாண சபையின் நிறைவேற்றுத்துறை மற்றும் நிர்வாக செயற்பாடுகள், நிதி முகாமைத்துவம் என்பவை வினைத்திறனாக நடைபெற்றிருக்கின்றதா? என்பதனைப் பார்த்துவிட்டு அடுத்த படியாக நாம் மேலும் என்னென்ன செய்திருக்க முடியும் என்ற விடயத்திற்கு வருகின்றேன்.
நான் முதன் முதலில் இச் சபைக்கு வந்த போது எடுத்துக் கொண்ட விடயம் இரணைமடு – யாழ் நீர் வழங்கல் மற்றும் கழிவகற்றல் திட்டத்தினை நீங்கள் தடுத்தமை தொடர்பாக. அப்போது கௌரவ முதலமைச்சர் அவர்கள் கூறியிருந்தார், நாங்கள் மாற்றுத்திட்டம் முன் வைப்போமென்று. தங்களிற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி வதிவிடப் பிரதிநிதியினால் மாற்றுத்திட்டத்தினை நிதியமைச்சினூடாக சமர்ப்பிக்கும் படி கோரப்பட்டிருந்தது. நீங்கள் இது வரை மாற்றுத்திட்டமேதாவது சமர்ப்பித்திருக்கின்றீர்களா? அத் திட்டத்தில் முக்கியமாக யாழ் மநகர சபையின் கழிவு நீர் அகற்றல் தொடர்பான திட்டமும் உள்ளடங்கியிருக்கின்றதா? இன்று யாழ் மாநகர சபை நாற்றமெடுக்கின்றது. மாற்றுத்திட்டமாக என்ன செய்திருக்கின்றீர்கள்? நடைமுறைப்படுத்தப்படவிருந்த திட்டத்தை வேண்டாமென்று தூக்கியெறிந்திருந்தீர்கள்,
எமது மாகாண சபைக்கு ஒரு வருடத்திற்குக் கிடைக்கும் மூலதன நிதி ஏறத்தாழ ரூ.4,000-4,500 மில்லியன் வரையே, இவ்வருடம் அதனை விடக் குறைவு. இரணைமடுத்திட்டத்திற்குக் கிடைக்கவிருந்த நிதியோ ரூ. 25,000 மில்லியன். (USD 164 மில்லியன்). ஐந்து வருடத்திற்கு மாகாணசபைக்குக் கிடைக்கும் நிதியை விடக் கூட. அதனை வேண்டாமென்று உதறித் தள்ளினீர்கள். மாற்றுத்திட்டமாவது இது வரை கொடுத்திருக்கின்றீர்களா?
இத் திட்டம் தொடர்பாகத் தங்களினால் மத்திய அமைச்சிற்கு 2014–2016ம் ஆண்டுகளிற்கிடையில் ஏதாவது கடிதம் அனுப்பப்பட்டதா என நான் அண்மையில் கேள்வி கேட்டிருந்தேன். அதற்குப் பதிலாக அவ்வாறு நானெந்தக் கடிதமும் அனுப்பவில்லை என கௌரவ முதலமைச்சர் அவர்கள் கூறியிருந்தார். ஆனால் தங்களது பிரத்தியேக செயலாளர் கருத்து ஆவணமொன்றினை (Concept Note) 2014 நவம்பர் மாதத்தில் மத்திய அமைச்சின் செயலாளரிற்கு அனுப்பியிருக்கின்றார். இதுதான் தங்களுடைய கருத்து ஆவணமா, இதனைத் தாங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா? அல்லது இவ்விடயம் தங்களிற்குத் தெரியாதா?
2014ஆம் ஆண்டு இச்சபையின் கவனத்திற்கு நான் கொண்டு வந்த முக்கிய விடயங்களில் இன்னுமொன்று பளையில் அமைக்கப்பட்ட மின் காற்றாலை தொடர்பானது. அவ் ஒப்பந்தத்தில் முதலில் சபையினுடைய முன்னைய செயலாளரைக் கையொப்பமிட வைத்துள்ளீர்கள். இது எவ்வளவு பிழையான ஓர் செயற்பாடு. சபையின் செயலாளரிற்கும், நிறைவேற்று அதிகார செயற்பாட்டிற்கும் என்ன தொடர்பு? அது மட்டுமல்ல, அக் காற்று மின்னாலை அமைத்த யூல் பவர் மற்றும் பீற்றா பவர் நிறுவனங்களிடமிருந்து முதலில் பெற்ற நிதிக் கணக்குகள் மாகாண சபையின் கணக்கிற்குள் உட்படுத்தப்படவில்லை. இது ஓர் பாரிய குற்றம். அது மட்டுமல்ல அங்கு வெளிப்படைத் தன்மை கையாளப்படவில்லை. வெளிப்படைத் தன்மை கையாளப்பட்டிருக்குமாயின் அவர்கள் தந்த பணத்தை விடக் கூடிய தொகையை இன்னொரு நிறுவனம் தர முன் வந்திருக்கலாம். அன்று இது தொடர்பாக நான் கேள்வியெழுப்பிய போது தங்கள் தரப்பில் கூறப்பட்ட பதில் நாங்கள் இப்படியான விடயங்களைப் பகிரங்கமாக செய்தால் அரசிற்கு அது தெரிய வந்து எமக்குத் தருக்கின்ற நிதிகளைக் குறைத்து விடுவார்கள் என்று. இது ஓர் பொறுப்புள்ள பதிலா எனத் தங்களை வினவ விரும்புகின்றேன். விவசாய அமைச்சரிடமிருந்து கிடைக்கப்பெற்ற பதில்கள் ஏற்றுக்கொள்ளமுடியாத காரணத்தால் கணக்காய்வாளர் நாயகத்திற்கு இது தொடர்பாக நான் கடிதம் எழுதியிருந்தேன்.
இன்று கௌரவ முதலமைச்சர் அவர்களினால் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவும் அந் நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட நிதியின் பிரயோகம் தொடர்பான உண்மை நிலையைக் கொணர்வதற்கு ஓர் கணக்காய்வு நடைபெற வேண்டுமென கௌரவ முதலமைச்சர் அவர்களிற்குப் பரிந்துரை செய்திருப்பதனையும் தங்கள் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகின்றேன். நான் அன்று வெளிப்படைத் தன்மையைக் கோரியது நியாயமானதென விசாரணைக் குழுவின் அறிக்கை உறுதிப்படுத்துகின்றது. (பக்கம் – 32டி)
அன்றைய கால கட்டத்தில் நான் எதைப் பேசினாலும் ஆளுநர் எதனையும் செய்ய விடுகிறார் இல்லை, பிரதம செயலாளர் ஆளுநருடன் சேர்ந்து தடையாக இருக்கின்றார் என்று கூறினீர்கள். அந்த ஆளுநர் மாற்றப்பட்டு சிறந்த நிர்வாகி ஒருவர் ஆளுநராக இருந்தார், நீங்கள் கோரியது போல் பிரதம செயலாளர் மாற்றப்பட்டார், ஆனால் நீங்கள் சாதித்தது என்ன? ஆடத் தெரியாதவள் மேடை கோணல் என்று கூறியதைப் போல்தான் தங்கள் கூற்று அமைந்திருக்கின்றது.
முன்னைய பிரதம செயலாளரின் நடவடிக்கையைக் கட்டுப்படுத்தும் முகமாக ஓர் சுற்றறிக்கை விடுத்திருந்தீர்கள், பின் நீதி மன்றத்தின் முன் அச் சுற்றறிக்கையை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளீர்கள். அவ்வாறான ஓர் சுற்றறிக்கையை விடுவதற்கு முன் அது இலங்கையின் சட்ட ஏற்பாடுகளிற்கு, இலங்கையின் நிர்வாக ஏற்பாடுகளிற்கு அமைவாக உள்ளதா என்பதனை ஆராய்ந்துதான் விட்டிருக்க வேண்டும். இறுதியில் நீதிமன்றத்தின் முன் தங்கள் தவறினை ஏற்றுக் கொண்டுள்ளீர்கள்.
இது மட்டுமல்ல, சமாதானத்தைக் கட்டியெழுப்பும் நிதித் (Peace Building Fund) தேவைகள் மதிப்பீடு (Joint Need Assessment) தொடர்பாகத் தாங்கள் ஓர் ஆலோசகரைப் பெயர் குறிப்பிட்டு ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதிக்கு சிபார்சு செய்ததன் விளைவாகத் தங்களிற்கும், ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளிற்குமிடையிலேற்பட்ட முரண்பாட்டின் விளைவு, எமக்குக் கிடைக்கவிருந்த சமாதானத்தைக் கட்டியெழுப்பும் நிதி அவர்களினால் வேறு வழியில் திசை திருப்பப்பட்டது. அது மட்டுமல்ல அந்த முரண்பாடு மாகாண சபைக்கும், UNDP க்கும் இடையில் ஓர் பாரிய விரிசலை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், ஓர் தனிப்பட்ட நபரிற்காக ஓர் சர்வதேச ஸ்தாபனத்தையே பகைக்கின்ற நிலைமைக்கு எம்மை இட்டுச் சென்றுள்ளது. எமக்குக் கிடைக்க இருந்த எத்தனையோ உதவித்திட்டங்கள் இதனால் உதறித்தள்ளி விடப்பட்டிருக்கின்றது.
ஒட்டிசுட்டானில் இந்திய அரசின் உதவியுடன் நிறுவப்படவிருந்தவோர் தொழிற்பயிற்சி நிலையம், தங்கள் அமைச்சினதும், அதிகாரிகளினதும் அசமந்தப் போக்குக் காரணமாக இன்று கைவிடப்பட்டுள்ளது. நான் இதைனையிட்டு சபையிற் கேள்வியெப்பிய போது தங்களிற்கு அது தொடர்பாக எதுவும் தெரியாது எனக் கூறியிருந்தீர்கள். ஆனால் தங்கள் அதிகாரிகள்தான் சென்று காணியைக் கூடப் பார்த்திருக்கின்றார்கள், இது கூடத் தங்களிற்குத் தெரியாதா?
ஏப்ரல் 20ந் தேதி நோர்வே தூதரகத்தின் அனுசரணையுடன், இலங்கை வெளிவிவகார அமைச்சுடன் இணைந்து சீப்பா (CEPA) என்று அழைக்கப்படும் வறுமையொழிப்பிற்கான மையத்தினால் (Centre for Poverty Aviation) புலம் பெயர் தமிழர்களின் பங்களிப்புடன் முதலீடு தொடர்பான கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில்; பங்குபற்ற இருக்கின்றீர்களா? வடக்கில் முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பான அறிக்கைகள் தயாரித்துவிட்டீர்களா என நான் வினவிய போது அவ்வாறான கூட்டம் தொடர்பாக தனக்கெதுவும் தெரியாது என கௌரவ முதலமைச்சர் அவர்கள் இச் சபையில் பதிலளித்திருந்தார்;. ஆனால் நான் இது தொடர்பாக நோர்வே தூதரகத்திடம் விசாரித்த போது தங்களிற்கும், தங்களின் இணைப்புச் செயலாளரான திரு. நிமலன் அவர்களிற்கும், ஏப்ரல் 4ந் தேதி அழைப்பிதழ் அனுப்பப்பட்டதாகவும், தொலைபேசியூடாக இது தொடர்பாகத் தங்களுடன் கலந்துரையாடியதாகவும் கூறியிருந்தார்கள். கௌரவ முதலமைச்சர் அவர்கள் வடக்கில் வாழும் 12 இலட்சம் மக்களிற்குப் பொறுப்புக் கூற வேண்டியவர். தாங்கள் இவ்வாறான ஓர் பதிலைக் கூறுவது ஓர் பொறுப்பற்ற செயற்பாடு இல்லையா?
யாழ் மாநகர சபையில் கடந்த முதல்வர் காலத்தில் நடைபெற்றதாகக் கூறப்பட்ட விடயங்கள் தொடர்பான விசாரணையை மேற்கொள்வதற்காக திரு.கந்தையா அரியநாயகம் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக 34வது சபை அமர்வில்(01.09.2015) கௌரவ உறுப்பினர் பரஞ்சோதி அவர்களின் வினாவிற்குப் பதிலளித்த போது கூறியிருக்கின்றீர்கள். ஹன்சாட் பதிவு இதோ என்னிடமிருக்கின்றது.) இது தொடர்பாக தகவல் அறியும் சட்டத்தின் கீழ் அவ்வறிக்கையின் பிரதியைத் தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்ட போது, ஓய்வு பெற்ற கந்தையா அரியநாயகம் அவர்கள் யாழ் மாநகர சபைக் கடைத் தொகுதி தொடர்பாக மட்டுமே விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பித்துள்ளாரே அன்றி ஏனைய விடயங்கள் தொடர்பாக அவரது அறிக்கை இல்லை எனப் பதிலளிக்கப்பட்டுள்ளது. ஏன் இவ்வாறான குழப்ப நிலையென்று எனக்கு விளங்கவில்லை.
யாழ் மாநகர சபை சுத்திகரிப்புத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்த போது அவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபடுவதற்கான கூட்டத்திற்கு முன்னைய அமைச்சர் கௌரவ ஐங்கரநேசன் அவர்களுடன் நானும் சென்றிருந்தேன். அக் கூட்டத்தில் அத் தொழிலாளர்களினால் முன்வைக்கப்பட்ட முதலாவது குற்றச்சாட்டு தங்களது பிரச்சினைகள் தொடர்பாக அவர்களின் பிரதிநிதிகள் கடந்த மூன்றாண்டு காலமாக எத்தனையோ தடவைகள முதலமைச்சர் காரியாலயத்தில் கூட்டங்களிற்குச் சமூகமளித்திருந்ததாகவும், ஒவ்வொரு முறையும் கூட்டம் ஆரம்பிக்கும் போது ஏதோ புதிதாக விடயங்களைக் கேட்பது போல் கேட்கப்பட்டதாகும். அவ்வாறான அசமந்தப் போக்குடைய உங்களை நம்பி உங்களுடன் தாங்கள் பேசுவதில் என்ன பிரயோசனம் என எங்களைப் பார்த்துக் கேட்டிருந்தார்கள். இதைத்தான் நான் உங்களிடம் கேட்க விரும்புகின்றேன். அந்தச் சுத்திகரிப்புத் தொழிலாளர்களினாற் சுட்டிக்காட்டப்பட்ட அசமந்தப் போக்குத்தான் உங்கள் அமைச்சுகளின் செயற்பாடுகள் என்பதனைத் தாங்கள் ஏற்றுக் கொள்கின்றீர்களா?
பெரிய ஆரவாரங்களுடன் லண்டன் மாநகரிலே Kingston Upon Thames நகரத்துடன் ஏதோ பெரிய ஒப்பந்தம் செய்து விட்டீர்கள் என ஊடகங்கள் பிரசுரித்திருந்தன. இன்று அவ் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு ஒரு வருடத்திற்கு மேலாகின்றது, எமது மாநகர சபைக்கு அதனால் இது வரை ஏதாவது பயன் கிடைத்திருக்கின்றதா? அதே போல் கனடாவில் – மார்கம் நகராட்சி மன்றத்துடன் முல்லைத்தீவிற்கான ஓர் நட்புறவு உடன்படிக்கை செய்யப்பட்டமை தொடர்பாக ஊடகங்களிற் பெரிதாக விளம்பரப்படுத்தப்பட்டது. இவையெல்லாம் மக்களை ஏமாற்றுவதற்காகான செயற்பாடுகளாகவே கணிக்க வேண்டியுள்ளது. புலம் பெயர்ந்து வாழ்கின்றவர்கள் அங்கு தங்கள் அரசியல் செல்வாக்கை நிலைநாட்டுவதற்காகத் தங்களை ஓர் பகடைக் காயாகப் பாவித்திருக்கின்றார்கள் என்றே எனக்கு எண்ணத் தோன்றுகின்றது. பிறம்ப்ரன் நககராட்சித் தலைவரும் தங்களுடன் வவுனியாவிற்கான ஒப்பந்தம் செய்யவிருப்பதாகப் பிரசாரம் செய்யப்பட்டிருந்தது. ஆனால் தங்களைக் கண்டவுடன் அந் நகராட்சித் தலைவர் ஓடியொழித்து விட்டார்.
சுண்ணாகம் நிலத்தடி நீர் தொடர்பாக பிரித்தானிய உயர் ஸ்தானிகர் 2016 யூன் மாதம் யாழ் வந்த போது, சுண்ணாகம் பகுதியில் ‘கடந்த காலங்களில் நீர் மாசடைந்தமை ஓர் பிரச்சினையாக இருந்தாலும், வெளிநாடுகளில் நீர் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் தற்போது ஒயிலின் அளவு அபாய நிலையிலும் குறைவாக இருக்கின்றது’ என்று கூறினீர்களா எனக் கேள்வியெழுப்பியிருந்தேன். அதற்கு நீங்கள் பதிலளிக்கும் போது நிபுணர் குழு அறிக்கையில் அவுஸ்திரேலியாக் குழுவொன்று வெளிநாடுகளிற்கு நீர் மாதிரிகளைக் கொண்டு சென்று பரிசோதனை செய்தததில் அவ்வாறாகக் கூறப்பட்டதைத்தான் அவர்களிற்குக் கூறியிருந்தேன் எனக் கூறியிருந்தீர்கள். அந்த நிபுணர் குழு அறிக்கையை வாசித்துப் பாருங்கள் அவுஸ்திரேலியக் குழுவொன்று சுண்ணாகத்தில் பன்னிரண்டு கிணறுகளிலிருந்து மாத்திரமே மாதிரிகளை எடுத்துச் சென்று வெளிநாடுகளிற் பரிசோதித்தாகவும், அந்த நீர் மாதிரிகளில் ஒயில் இல்லையெனவும் குறிப்பிட்டிருக்கின்றார்கள். அத்துடன் தங்களின் இந்த முடிவுகளை சுண்ணாகம் பகுதியிலுள்ள முழு நீர்த் தேக்கத்திற்கும் பொருந்துமென்று கொள்ளமுடியாது என்றும் அவர்களே குறிப்பிட்டிருக்கின்றார்கள். (அவ் அறிக்கையில் கூறப்பட்டிருக்கும் ஆங்கில வாசகங்களை வாசிக்கின்றேன்). அவ்வாறு அவர்களே கூறியிருக்கும் போது, ஒயில் கசிவினால் சுண்ணாகம் பகுதியில் பாதிக்கப்பட்ட கிணறுகள் ஏறத்தாழ 4,000 இருக்கும் போது, இந்த பன்னிரண்டு மாதிரிகளையும் வைத்துக்கொண்டு பிரித்தானிய உயர் ஸ்தானிகரிற்கு நீங்கள் எவ்வாறு கூறமுடியும், சுண்ணாகம் கிணறுகளில் ஒயில் குறைந்து வருவதாக?
உயரதிகாரிகளைக் கூடத் தங்களால் சரியாகப் பயன்படுத்தத் தெரியவில்லை. உயர் நிலை அதிகாரிகளான திருவாளர்கள் மோகன்ராஜ் (4 மாதம்) வரதீஸ்வரன் (6 மாதம்), தெய்வேந்திரம் (7 மாதம்) சிவபாதசுந்தரம் (7 மாதம்) மற்றும் திருமதி சாந்தசீலன் (4 மாதம்) ஆகியோரை மாதக்கணக்கில் பயன்படுத்தப்படாமல் குழாமில் (Pool) வைத்திருந்தீர்கள், இவையெல்லாம் தங்கள் நிர்வாகத்தின் வினனைத்திறனற்ற செயற்பாடென்று கூறாமல் வேறு எவ்வாறு கூறுவது? நானிங்கு குழாம் என்று குறிப்பிடுவது அவர்களிற்கு எந்த வித பதவியும், கடமைகளும் ஒதுக்கப்படாமல் கையெழுத்திடவிட்டு சும்மா இருக்க விட்டமை. மக்கள் வரிப்பணத்தில் சம்பளத்தையும், ஏனைய சலுகைகளையும் வழங்கிக் கொண்டு அதிகாரிகளை நீண்ட காலத்திற்குக் குழாமில் வைத்திருப்பதனை வினைத்திறனான செயற்பாடென்று எவ்வாறு கூறுவது?
தரங் கூடிய அதிகாரிகளைக் குழாமில் வைத்துக் கொண்டு, அவர்களை விடத் தரம் குறைந்தவர்களை செயலாளர்களாகவும், உயரதிகாரிகளாவும் நியமித்திருக்கின்றீர்கள். திருமதி சாந்தசீலன் அஞ்சலிதேவி கூட்டுறவு ஆணையாளராக நியமிக்கப்பட்டிருந்தார். இரு தினங்களில் அவரது நியமனக் கடிதம் மாற்றப்பட்டு வேறொருவரிற்கு அந் நியமனம் வழங்கப்பட்டது.
அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் ஆளுநரிற்கே உரியது எனக் கூறி நீங்கள் தப்பித்துக் கொள்ளப் பார்ப்பீர்கள். ஆனால் தங்களது சிபார்சிலும், வேண்டுகோளினதும் அடிப்படையிலேயே ஆளுநர் அவ்வாறு செயற்பட்டார் என என்னால் உறுதியாகக் கூறமுடியும். இறுதியில் தங்கள் பந்தாடல் போன்ற சிபார்சுகளைப் பொறுக்க முடியாமற்தான் ஆளுநர் இவ்விடயத்தில் சில இறுக்கமான முடிவுகளை எடுத்தார்.
மாகாண சபையினால் வாடகைக்கு எடுக்கப்பட்ட கட்டடங்களின் வாடகைக் கொடுப்பனவு தொடர்பாக நான் கௌரவ முதலமைச்சர் அவர்களிடம் கேள்வி கேட்டு வாடகைப் பணங்கள் அரச மதிப்பீட்டுத் திணைக்களத்தினால் மதிப்பீடு செய்து பெறப்படவில்லை என இச் சபையில் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன். அப்போது கௌரவ முதலமைச்சர் அவர்களால் கூறப்பட்ட பதில் அது ஆளுநரின் ஒப்புதலுடன்தான் பெற்றுக் கொள்ளப்பட்டதென்று. எனது கூற்று சரியென்பதனை 2015ம் ஆண்டு கணக்காய்வு அறிக்கை உறுதி செய்கின்றது. (பக்கம் 16)
அத்துடன் 2015ஆம் ஆண்டு செயலாளர்களிற்குக் கொடுக்கப்பட்ட வீடுகள் தொடர்பான வாடகைக் கொடுப்பனவு மற்றும், மின்சாரம், நீர்ச் செலவு தொடர்பான ஏறத்தாழ ரூ.924,000- தொகையை மீளப் பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் கணக்காய்வறிக்கையிற் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. (பக்கம் 16)
ஏற்கனவே மக்கள் நலன் சார் வேலைத்திட்டங்களிற்காக அரசினால் கொடுக்கப்பட்ட நிதிகள் ஆளுநர் நிதியத்திற்கு மாற்றப்பட்டு, அங்கு கிடப்பிலிருப்பதை இனங்கண்டு மாகாண சபை கடந்த வருடம் மீண்டும் அதை அமைச்சுகளிற்கும், திணைக்களங்களிற்கும் மாற்றும்படி தீர்மானமெடுத்தது. அத் தீர்மானத்தின் அடிப்படையில் கடந்த செப்ரெம்பரில் ரூ.144 மில்லியனில் குறிப்பிட்ட திணைக்களங்களிற்கும், அமைச்சுகளிற்கும் மாற்றம் செய்யப்பட்டு, கடந்த 10 மாதங்களாக இந் நிதி பிரயோகப்படுத்தப்படாது கணக்கிலிருக்கின்றது. அதிற் பெரும்பான்மையான நிதி விவசாயம் மற்றும் கூட்டுறவு அமைச்சிற்குரியது (105 மில்லியன்).
2014ம் ஆண்டு மூலதனச் செலவீட்டிற்காக அரசினாற் தரப்பட்ட நிதியில் ரூபா 690 மில்லியன் (ரூ.690,704,473ஃ-) டிசம்பர் 2014 வரை செலவழிக்கப்படாமல் வைப்புக் கணக்குகளில் இட்டுவிட்டு 2015 ஆகஸ்ட் மாதம் வரை செலவழித்தது மட்டுமல்ல 2015 ஜனவரி 20 இல் வெளிவந்த வடமாகாண சபை நிதிக்கூற்றறிக்கையில் வெறும் ரூ.16 மில்லியன் (16,000,000/-) தவிர ஏனைய முழுப்பணமும் செலவழித்ததாகக் காட்டியிருந்தீர்கள். இது முழுக்க முழுக்க ஓர் தவறான செயற்பாடு. பணம் செலவழிக்கப்படாதிருக்கும் போது செலவழித்ததாக மக்களிற்குக் கணக்குக் காட்டியுள்ளீர்கள், இதை நான் பல தடவை இச் சபையில் எடுத்துக் கூறியிருக்கின்றேன். நான் இது வரை நினைத்திருந்தேன் 2014 உடன் இவ்விடயம் திருத்தப்பட்டதாக.
ஆனால் அண்மையில் 2015ஆம் ஆண்டு கணக்காய்வு அறிக்கையினைப் பார்க்கும் போதுதான் எனக்குத் தெரிய வந்தது 2015ஆம் ஆண்டிலும் ரூ.92,585,349/- செலவு செய்யப்படாமல் வருட இறுதியில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக. (பக்கம் 8)
நெல்சிப் திட்டத்தின் கீழ் செப்ரெம்பர் 2013ம் ஆண்டிற்குப் பின் முடிவடைந்த 128.784 மில்லியன் செலவில் கட்டப்பட்ட 14 கட்டடங்கள் இன்னும் மக்கள் பாவனைக்காகத் திறக்கப்படாமலிருக்கின்றது என்பதைத் தாங்கள் அறிவீர்களா? இதனை எவ்வாறு தங்களின் வினைத்திறனான செயற்பாடென்பதனைக் கூற முடியும்? இவ்வாறான அசமந்தமான செயற்பாடுகளிற்கு யார் பொறுப்பு?
அடுத்து கௌரவ அவைத் தலைவர் அவர்களே, விவசாயம் மற்றும் கூட்டுறவு அமைச்சின் செயற்பாடுகளை மீளாய்வு செய்ய விரும்புகின்றேன்.
முன்னைய விவசாய அமைச்சர் பொருளாதார அபிவிருத்தி தொடர்பான பல முதலீடுகளிற்குத் தடையாக இருந்திருக்கின்றார் என்ற முறைப்பாடு பலரால் எனக்கு முன்வைக்கப்பட்டிருக்கின்றது. முதலாவது சுற்றுச்சூழல் சம்பந்தமாக தலையிடுவதற்கோ, தடை செய்வதற்கோ விவசாய அமைச்சரிற்கு அதிகாரம் இல்லை. நான் இங்கு அதிகாரமில்லை எனக் கூறுவது அதற்குரிய நியதிச் சட்டங்களை ஆக்கினால் மட்டுமே அந் நியதிச் சட்டத்திற்கு அமைவாக அமைச்சரிற்கு அதிகாரம் இருக்கின்றது. கடந்த 45 மாதங்களாக சுற்றுச்சூழல் சம்பந்தமான நியதிச் சட்டத்தினை ஆக்கி முதலில் அமைச்ர் தனக்குரிய அதிகார வரம்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும். இரண்டாவது எல்லா விடயத்திலும் சுற்றுச் சூழல் பாதிக்கப்படுமென்றே கூறிக் கொண்டே இருந்தால் நாம் அபிவிருத்தியைக் காண முடியாது. 1492ம் ஆண்டு கொலம்பஸ் அமெரிக்காவில் காலடி எடுத்து வைக்கும் போது இருந்த அமெரிக்கா வேறு, இன்று இருக்கும் அமெரிக்கா வேறு. சுற்றுச் சூழல் பாதிப்படையுமென்று ஒவ்வொரு விடயத்திலும் பார்த்திருந்தால் அமெரிக்கா இன்று அபிவிருத்தியில் முன்னேறியிருக்க முடியாது. ஆதலால் எம் மக்களிற்கு அபிவிருத்தி வேண்டுமென்றால் நாம் சில விடயங்களில் நெகிழ்வுத் தன்மையாகவும் நடக்க வேண்டும்.
வவுனியா மாவட்டத்தில் மூங்கில், மல்லிகை வளர்ப்புத் திட்டங்கள், எள் விநியோகித்து சுயதொழிலை முன்னெடுக்கும் திட்டங்கள் தொடர்பாக முதலமைச்சரின் விசாரணைக் குழுவின் அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. ‘அனுமதி பெறத் தேவையற்ற விடயங்களிற்கெல்லாம் அனுமதி பெறவேண்டுமென வலியுறுத்துவது அமைச்சர் அவர்களின் அதிகார துஸ்பிரயோகமென விசாரணைக் குழு அபிப்பிராயப்படுவதாகவும்’ மற்றும் ‘மூங்கில் நடுகைத் திட்டத்தை நிராகரித்தமை சட்டபூர்வமற்றதெனவும், முதலீட்டாளரைத் தன்னை வந்து சந்திக்கும்படி கேட்டுக் கொண்டதால் அவர் (அமைச்சர்) நடத்தை மீது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும், விசாரணைக்குழு கருதுவதாகவும்’ குறிப்பிடப்பட்டுள்ளது.
விசாரணைக் குழுவின் சந்தேகத்தில் நியாயமிருக்கின்றது. மாங்குளத்தில் கரும்புச் செய்கைக்காக முதலீடு செய்வதற்காக முன்வந்த ஓர் நிறுவனத்தில் இருந்தும் இதே போன்ற ஓர் முறைப்பாடு எனக்குக் கிடைக்கப் பெற்றுள்ளது. அமைச்சர் ஏதோ 25 வரை கேட்டதாகவும் அவர்கள் 15 வரை தருவதாகவும் கூறியதாகவும் நான் அறிகின்றேன். அது என்ன 25, 15 எனக்கு விளங்கவில்லை.
மருதங்கேணி கடற்றொழிலாளர் சமாசத் தலைவர் தமது கடிதத் தலைப்பைத் தவறாகப் பயன்படுத்தியதற்காக அவரைப் பதவி நீக்கம் செய்தது தவறு என இச் சபையில் நானும், கௌரவ உறுப்பினர் சுகிர்தன் அவர்களும் விவாதித்திருந்தோம். எங்கள் இவ் விவாதம் சரியென்பதனை இவ் விசாரணைக் குழு அறிக்கை நிரூபித்துள்ளது. இப்பதவி நீக்கம் தொடர்பாகக் கூட்டுறவு ஆணையாளரிற்கு எதிராக சமாசத் தலைவரினால் தொடரப்பட்ட வழக்கில் இக் குழுவின் அங்கத்தவரொருவர் சட்டத்தரணியாகச் செயற்பட்டுள்ளார். ஆதலினால் இங்கு அக்கறை முரண்பாடொன்றுள்ளது (conflict of interest) என சிலரால் எடுத்துக் கூறப்படுகின்றது. முதலில் கவனிக்க வேண்டியது அவ் வழக்கு கூட்டுறவு ஆணையாளரிற்கும் பிரதேச செயலரிற்கும் எதிரானதேயன்றி அமைச்சரிற்கு எதிரானதேயன்று. ஆதலினால் அவ் வழக்கில் ஆஜராகிய ஒருவர் இவ் விசாரணைக் குழுவில் அங்கத்தவராக இருப்பது எவ் வகையிலும் ‘அக்கறை முரண்பாடாக’ அமையாது.
மற்றையது மூன்று குழு அங்கத்தவர்களில் ஒருவர் மேல்தான் இக் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. மூவரடங்கிய அவ் விசாரணைக் குழுவில் மற்றைய இருவரும் இதே முடிவைத்தான் எடுத்துள்ளார்கள். முதலமைச்சரின் விதி முறைக் குறிப்பில் (Terms of Reference) ‘ஒருமித்த தீர்மானமெடுக்கப்படாதவிடத்து பெரும்பான்மை உறுப்பினர்களின் ஒருமைப்பாட்டுடன் நிறைவேற்றப்படும்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதலினால் அக்கறை முரண்பாடு உள்ளவர் எனக் கூறப்படும் விசாரணைக் குழு உறுப்பினரைத் தவிர்த்தாலும் ஏனைய இரு பெரும்பான்மை உறுப்பினர்களின் முடிவும் இவ்வாறாகக் காணப்படுகின்றது.
கிளிநொச்சி பனை, தென்னை கூட்டுறவுச் சங்கத்திற் பல ஊழல்கள் தொடர்பாக கூட்டுறவுச் சட்ட விதி 46/01 இன் கீழ் விசாரணை செய்யப்பட்டுப் பல நிதி மோசடிகள் நடைபெற்றதாக கடந்த வருடம் மே மாதத்தில் அறிக்கையிடப்பட்டிருந்தும், அவ்வாறு மோசடி செய்யப்பட்ட நிதியினை மீளப் பெறுவதற்கு கூட்டுறவு ஆணையாளரிற்கு அதிகாரம் இருந்தும் இது வரை அந்த நிதியினை மீளப் பெற நடவடிக்கை எடுக்காதது ஏன் எனக் கூட்டுறவு அமைச்சரைப் பார்த்துக் கேட்கின்றேன். யாருடைய தலையீட்டினால் அது நிறுத்தப்பட்டுள்ளது?
சுண்ணாகம் நிலத்தடி நீர் விவகாரம் தொடர்பாக முன்னைய அமைச்சரினால் அமைக்கப்பட்ட நிபுணர்குழுவும் அவர்களுடைய அறிக்கையும் நொதேர்ண் பவர் நிறுவனத்தைக் காப்பாற்றுவதற்காக செயற்படுத்தப்பட்ட அரங்கேற்றமென்று நான் இந்த சபையினிலே விஞ்ஞான ரீதியான ஆதாரங்களுடன் ஒரு மணித்தியாலத்திற்கு மேலாக உரையாற்றியிருந்தேன். அப்போது பதில் உரைத்த விவசாய அமைச்சர் இது நிபுணர்கள் குழுவைக் கேட்க வேண்டிய விடயம் கேட்டிருந்தால் நான் அவர்களுடன் இவ் விடயங்களை விவாதிப்பதற்கு ஒழுங்குபடுத்தியிருப்பேன் என்று கூறியிருந்தார். நான் அன்று கூறினேன், அதன் பிற்பாடும் அமைச்சரிற்குக் கூறியிருக்கின்றேன், இன்றும் கூறுகின்றேன் ஏன் நீங்கள் அந்த நிபுணர்களை என்னுடனான விவாதத்திற்கு ஏற்பாடு செய்யவில்லை? உங்கள் பக்கத்தில் நியாயமிருந்தால் எடுத்துக் கூறுங்கள், நான் ஏற்றுக் கொள்வேனென்று கூடக் கூறியிருந்தேன்.
கணக்காய்வில் விவசாயம் மற்றும் கூட்டுறவு அமைச்சு தொடர்பாக எவ்வித குற்றச்சாட்டுகளும் தெரிவிக்கப்படவில்லை. அவ்வாறாக அமைச்சின் கணக்காய்வறிக்கையில் எவ்வித குற்றங்களும் காணப்படாத நிலையில் விசாரணைக் குழுவின் அறிக்கையில் குற்றங்களிருப்பதாகக் கூறியிருப்பதாகப் பகிரங்கமாக முன்னாள் விவசாய அமைச்சர் கூறியதாக ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொண்டேன். முதலில் ஒன்றை விளங்கிக் கொள்ள வேண்டும், கணக்கிற்கு வந்தவைகள் தான் கணக்காய்விற்குட்படுத்தப்படும். கணக்கிற்கு வராதவை கணக்காய்விற்கு உட்படுத்தப்படமாட்டாது. உதாரணத்திற்குக் கையூட்டல் நடைபெற்றிருந்தால் அது கணக்காய்விற்கு உட்படுத்தப்படமாட்டாது. இன்னுமொரு விடயம் தெரிந்து கொள்ள வேண்டும் கணக்காய்வென்பது சகல நிதிக் கொடுக்கல் வாங்கல்களையும் பரிசோதிப்பது அல்ல. ஒரு சில மாதிரிகளைக் கணக்காய்விற்குட்படுத்தி அதிலிருந்து கணக்கு சம்பந்தமான அபிப்பிராயத்தைக் கொடுப்பதே கணக்காய்வு. (Audit is an opinion on the financial status based on test checks.). ஆதலினால் கணக்காய்வில் குறிப்பிடப்டவில்லை என்பதற்காக எல்லாம் கணக்காகத்தான் நடைபெற்றுள்ளது என்று கருத முடியாது.
கௌரவ அவைத் தலைவர் அவர்களே, இனிக் கல்வி அமைச்சின் கடந்த கால செயற்பாடுகளை சிறிது அலசிப் பார்க்க விரும்புகின்றேன்.
கௌரவ அமைச்சரினால் அமைக்கப்பட்ட விசாரணைக்குழு தனது அறிக்கையில் நியமனம் , இட ஒதுக்கீடு, இடமாற்றம் போன்ற விடயங்களில் ‘தலையிடாதிருக்க வேண்டிய கௌரவ அமைச்சர் இவ்விடயங்களில் அமைச்சர் வாரியத்தின் முடிவெனக் கூறுவது தவறான ஓர் நிலைப்பாடாகும். அமைச்சின் செயலாளரிற்கு வழங்கப்பட்ட நிர்வாக ரீதியிலான கடமைகளில் அமைச்சர் வாரியம் அல்லது கௌரவ அமைச்சர் தலையிடுவது தவறானதாகும்’. இவ்வாறாக அதிகார துஸ்பிரயோகம் செய்தாரென்ற காரணத்தினாற்தான் கௌரவ குருகுலராஜா அவர்களை அமைச்சர் பதவியிலிருந்து இராஜினாமா செய்ய வேண்டுமெனப் பரிந்துரை செய்திருக்கின்றனர்.
புதிய கல்வி அமைச்சர் என்ன செய்திருக்கின்றாரென்றால் கொக்குவில் இந்துக் கல்லூரிக்கு அதிபராகத் தான் குறிப்பிடுமொருவரை நியமிக்கும் படி பணிப்புரை வழங்கியிருக்கின்றார். அவரது பணிப்புரையில் அவ் நியமனக் கடிதத்திற் குறிப்பிடப்பட்டிருப்பதாவது ‘தற்போதைய புதிய கல்வி அமைச்சரின் அறிவுறுத்தலிற்கு அமையக் கூடுதலான புள்ளிகளைப் பெற்ற திரு. ம. ஞானசம்மந்தன் அவர்கள் 10.07.2017 முதல் எம்மால் நியமனம் செய்யப்பட்டுள்ளாரென்று’ கொக்குவில் இந்துக்கல்லூரி அதிபர் நியமனம் தொடர்பாக நேர்முகத்தேர்வின் பின், நேர்முகத் தேர்வுக் குழுவினரது (Interview Board) செயலாளரின் சிபார்சு மற்றும் நியாயப்படுத்தலின் அடிப்படையில் திரு. பஞ்சாட்சரம் கணேசன் என்ற பெயராகும். யாழ் இந்து ஆரம்பப் பாடசாலையில் குறைந்த புள்ளி எடுத்த ஒருவர்தான் அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். மாகாணப் பொதுச் சேவைகள் ஆணைக் குழு அது தவறு என்று கல்வி அமைச்சின் செயலாளரிற்குச் சுட்டிக்காட்டியும் அவர் எந்த வித நடவடிக்கையம் எடுக்கவில்லை. யாழ் இந்து ஆரம்பப் பாடசாலைக்கு ஒரு நியாயம், கொக்குவில் இந்துக் கல்லூரிக்கு இன்னொரு நியாயம்.
கௌரவ குருகுலராஜா அவர்கள் செய்தது பிழையென்றால், கௌரவ சர்வேஸ்வரன் அவர்கள் செய்தது அதனை விடப் பிழையான காரியம், அவரும் உடனடியாகப் பதவி விலக வேண்டும்.
கடந்த மார்ச் மாதம் நியமிக்கப்பட்ட 559 பட்டதாரிகளில் 94 பேர் அதிகாரிகளினதும், அரசியல்வாதிகளினதும் விருப்பில் யாழ் மாவட்டத்தில் நியமனம் பெற்றுள்ளனர். முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் போன்ற பிரதேசங்களில் ஆசிரியர் பற்றாக்குறையுள்ள போது தங்களுடைய இவ்வாறான செயற்பாடுகளை எவ்வாறு நியாயப்படுத்துவது?
தகவலறியும் சட்டத்தின் கீழ் கல்வி அமைச்சினாற் தரப்பட்ட தகவலின் அடிப்படையில் ‘கடமை நிறைவேற்று அதிபர் என்பவர் ஒரு பாடசாலையில் அதிபரில்லாத போது அதற்காக நியமிக்கப்படுபவரே கடமை நிறைவேற்று அதிபராவார். அவரின் நியமனக் கடிதத்தில் புதிய அதிபர் நியமிக்கப்படும்போது உடனடியாகத் தாங்கள் முன்பிருந்த பதவிக்குச் செல்ல வேண்டுமென்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. கடமை நிறைவேற்று அதிபர்களிற்கு இடமாற்றம் செய்ய வேண்டிய தேவையும் இல்லை, சுற்று நிருபமும் இல்லை. தகுதியான புதிய அதிபர்கள் நியமிக்கப்பட்டதும் கடமை நிறைவேற்று அதிபர் பதவி வலிதற்றதாகிவிடும்.’ இது கல்வி அமைச்சிலிருந்து கடமை நிறைவேற்று அதிபர்கள் தொடர்பாக என்னிடமிருக்கும் அதிகார பூர்வமான கடிதம். யாழ் பரமேஸ்வரா வித்தியாலயத்தில் கடமை நிறைவேற்று அதிபராக இருந்தவர் அங்கு புதிய அதிபர் நியமனம் பெற்றதும் அதிபர் பதவியிலிருந்து கீழிறக்கப்பட்டார். அதன் பின் என்ன செய்திருக்கின்றீர்கள், கலட்டி மெதடிஸ் (MMTMS) பாடசாலையில் தகுதியுடனிருந்த ஓர் அதிபரை (தரம் III) கொக்குவில் இந்துக் கல்லூரிக்குப் பலவந்தமாகப் பிரதி அதிபராக நியமித்துவிட்டு பரமேஸ்வரா வித்தியாலயத்திலிருந்து பதவியிழந்த அதிபரை கலட்டி மெதடிஸ் (MMTMS) பாடசாலைக்கு கடமை நிறைவேற்று அதிபராக நியமித்துள்ளீர்கள். கொக்குவில் இந்துக்கல்லூரிக்கு இரண்டு பிரதி அதிபரிற்கே வெற்றிடமுள்ளது. ஆனால் தற்போது அங்கு நான்கு பிரதி அதிபர்கள் உள்ளனர். அவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்ட அதிபர் தன்னை வலயக் கல்விப் பணிப்பாளர் தனது காரியாலயத்திற்கு அழைத்து அழுத்தம் பிரயோகித்து தன்னிடமிருந்து ஒப்புதற் கடிதமொன்றைப் பெற்றார்களென்று ஏற்கனவே மாகாணக் கல்விப் பணிப்பாளரிற்கு எழுத்து மூலம் அறிவித்திருக்கின்றார். வலயக் கல்விப் பணிப்பாளர் இது அமைச்சருடன் கதைத்துத்தான் எடுக்கப்பட்ட முடிவென்றும் இனி எதுவும் செய்ய முடியாது என்று தனக்குக் கூறியதாகவும் அவர் கூறுகின்றார். அதற்குரிய ஆதாரமும் என்னிம் உண்டு.
புனித ஜோன் பொஸ்கோ, யாழ் இந்து ஆரம்ப மற்றும் கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலைகளில் தரம்1 அனுமதி தொடர்பாக நான் இந்த சபையிலே கூறியிருக்கின்றேன், விசாரணை செய்யுங்களென முன்னைய அமைச்சரைக் கோரியிருக்கின்றேன், அவர் எல்லாம் சுற்று நிருபங்களின் அடிப்படையில் தான் நடைபெறுகின்றது எனக் கூறினார். கணக்காய்வு அறிக்கையிலேயே கூறப்பட்டிருக்கின்றது, யாழ் இந்து ஆரம்பப் பாடசாலையில் 240 மாணவர்களிடமிருந்து ரூ.2.4 மில்லியன் தொகை 2013 இல் மட்டும் சேகரிக்கப்பட்டுள்ளது. சேகரிக்கப்பட்ட நிதி பாடசாலையாலோ அல்லது பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினாலோ பேணப்பட்ட வங்கிக் கணக்கிற்குக் கொண்டு வரப்படவில்லையென அவ்வறிக்கையிற குறிப்பிடப்பட்டுள்ளது, இதற்கு யார் nhறுப்புக் கூறப் போகிறீர்கள். நான் வெளிப்படையாகவே கூற விரும்புகின்றேன் முன்னைய கல்வி அமைச்சரே, தங்களுடைய முன்னை நாள் பிரத்தியேக செயலாளரும் இந்தப் பண சேகரிப்புகளில் ஈடுபட்டவர்களில் ஒருவர் என நான் அறிகின்றேன்.
இப் பாடசாலைகளின் அனுமதியில் பல முறைகேடுகளிருப்பதனை நான் அன்றே சுட்டிக் காட்டியிருந்தேன். எல்லா விடயங்களும் சட்டம், ஒழுங்கின் படி நடைபெறவேண்டுமென சபையில் உரத்துக் கூறுகின்ற புதிய கல்வி அமைச்சரே தரம் 1 அனுமதிக்குத் தனக்குத் தெரிந்தவர்களிற்கு அனுமதி எடுத்துக் கொடுத்துள்ளாரென்பதை நான் இங்கு உறுதியாகக் கூற விரும்புகின்றேன். இது அவர் அமைச்சராவதற்கு முன்பு, அமைச்சராகிய பின் இது போன்று மேலும் செய்வாரோ தெரியாது. ஊருக்கு உபதேசம், உனக்கில்லை என்ற பழமொழியை அமைச்சர் பின்பற்றுகின்றார் போலும்.
ஆசிரியர்-அதிபர் மகாநாட்டிற்கென இரண்டு நாட்களில் 40 மில்லியன் செலவு செய்யப்பட்டிருக்கின்றது. இது எவ்வாறு கல்வி வளர்ச்சிக்கு உதவியது என விசாரணைக் குழுவின் அறிக்கையில் கேள்வியெழுப்பப்பட்டுள்ளது. விசாரணைக் குழு அறிக்கையில் மட்டுமல்ல 2014 கணக்காய்வு அறிக்கையில் ரூபா 149.68 மில்லியன் செலவில் நடாத்தப்பட்ட ‘பல்வேறு செயலமர்வுகள் மற்றும் கருத்தரங்குகள் தொடர்பில் மாகாணக் கல்வித் திணைக்களமிடமிருந்து கோரப்பட்ட தரவுகள் கணக்காய்விற்குத் தரப்பட்டிருக்கவில்லையெனக் கூறப்பட்டிருக்கின்றது. வீண்விரய செயற்பாடுகள் தொடர்பான விசாரணைக் குழுவின் அவதானத்தினைக் கணக்காய்வு அறிக்கை உறுதிப்படுத்துகின்றது.
முன்னாள் கல்வி அமைச்சரின் வாசஸ்தலத்திற்கு 2015இல் ரூ.496,600/- செலவில் தனியார் பாதுகாப்புச் சேவை வழங்கப்பட்டுள்ளது. இது ஓர் சர்ச்சைக்குரிய கொடுப்பனவாகக் கணக்காய்வு அறிக்கையில் கூட தெரிவிக்கப்பட்டுள்ளது.(Page 22)
வடமராட்சி கல்வி பணிப்பாளர் திரு. நந்தகுமார் தொடர்பாக விசாரணைக் குழுவின் அறிக்கையில் ‘கல்வி அமைச்சர், கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோரது சாட்சியங்களிலிருந்து கல்வி அமைச்சில் நடைபெற்ற நியமனங்கள், பதவி வழங்கல் இடமாற்றம் தொடர்பில் அமைச்சின் செயலாளரிற்கு வழங்கப்பட்ட நிர்வாக ரீதியான கடமைகளில் அமைச்சர் வாரியம் தலையிட்டுள்ளதாகவும் கொள்கை ரீதியான முடிவுகளை எடுப்பதே அமைச்சர்களினதும், அமைச்சர் வாரியத்தினதும் கடமையாகும்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது,
திரு. நந்தகுமாரின் விடயத்தில் மட்டுமல்ல வலி. வடக்குக் கல்விப்பணிப்பாளர் திரு. சந்திரராஜா அவர்களின் விடயத்திலும் இதே தவறையே அமைச்சர் வாரியம் விட்டுள்ளதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆதலால் விசாரணைக்குழுவின் அறிக்கை இதில் தெளிவாக உள்ளதென்பதையே திரு. சந்திரராஜா தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பு உறுதிப்படுத்துகின்றது.
கிளிநொச்சி புனித திரேசா பெண்கள் பாடசாலையின் அதிபர் கல்வி அமைச்சர் அவர்களின் அழுத்தம் காரணமாகவே நியமிக்கப்பட்டதாக செயலாளரின் வாக்குமூலத்தை வைத்துக் கொண்டு விசாரணைக்குழு முடிவிற்கு வந்துள்ளது.
அமைச்சரின் அழுத்தத்தில் நியமிக்கப்பட்ட இவ் அதிபரைப் பற்றி மேலும் சில விடயங்களை நான் குறிப்பிட வேண்டும். இவ் அதிபர் தொடர்பாகக் கணக்காய்வு அறிக்கையில் கூறப்பட்டதன்படி யுனிசெப் உதவியுடனான வகுப்பறைக் கட்டட நிர்மாணத்தின் போது இவ் அதிபரினால் மேலதிக கொடுப்பனவாக ரூ. 210,240/- வழங்கப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டினை அவர் ஏற்றுக் கொண்டு மாதாந்தம் ரூ.25,000/- செலுத்துவதற்கு சம்மதித்துள்ளார்.
இவ்வாறு குற்றம் செய்தவர் 1000 இற்குட்பட்ட மாணவர்களைக் கொண்ட சென் திரேசா பாடசாலையிலிருந்து 2000 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கும் கிளிநொச்சி மகாவித்தியாலயத்திற்கு அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் அங்கும் தனது கைவரிசையைக் காட்டியுள்ளார். உலக உணவுத்திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மகா வித்தியாலயத்திற்கு கொடுக்கப்பட்ட உலர் உணவுப் பொருட்களின் கையாளுகை தொடர்பாக இவ் அதிபர் மீது மாவட்டச் செயலகக் கண்காணிப்பு அலகினால் பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றது. இவ் உலர் உணவு விடயம் தொடர்பாகத் தகவல் கொடுத்த ஆசிரியை பழிவாங்கப்பட்டு வலயக் கல்வி அலுவலகத்தினால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதே அதிபர்தான் அண்மையில் விளையாட்டாகத் தேங்காய் பிடுங்கிய மாணவர்களைப் பொலிசாரிடம் கையளித்த போது இப்பிரச்சினையைப் பாடசாலை மட்டத்திலேயே தீர்த்துக்கொள்ளுமாறு பொலிசார் கேட்டிருந்தும் அம்மாணவர்களை பொலிஸ் மூலம் நீதிமன்றத்திற்குப் பாரப்படுத்தியவரென்பதும் கவனிக்கப்படவேண்டியதாகும். இவ்வாறானவர்களைத்தான் முன்னைய கல்வி அமைச்சர்; காப்பாற்றிக் கொண்டிருந்திருக்கின்றார்.
கல்வி அமைச்சர் அவர்களின் அதிகார துஸ்பிரயோகம் தொடர்பாக விசாரணைக் குழுவினால்; கூறப்பட்டவற்றிற்கு மேலாகவும் என்னால் ஆதாரங்கள் சமர்ப்பிக்க முடியும். கிளிநொச்சியில் வலயக் கல்விப் பணிமனைக்கு கையளிப்புச் செய்யப்பட்ட 06 ஏக்கர் காணியில் ஒரு ஏக்கரினை ஜெயராஜா என்பவரிற்கு வழங்கும்படி கரச்சி பிரதேச செயலாளரிற்குக் கல்வி அமைச்சரினால் கடிதம் எழுதப்பட்டிருக்கின்றது. அதன் பின்பு அதே ஜெயராஜாவிற்கு அரை ஏக்கரைக் கொடுங்களென இன்னொரு கடிதம் எழுதப்பட்டிருக்கின்றது. அதன் பின்பு ஜெயராஜிற்கு அரை ஏக்கரும், கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயக் காணியில் அத்து மீறியிருக்கும் குடியிருப்பாளர்களிற்கு 02 பரப்பு வீதம் வழங்கி மீதிக் காணியினைக் கல்வி வலயத்திற்கு வழங்குமாறும் கல்வி அமைச்சரினால் கோரப்பட்டிருக்கின்றது. கல்வி அமைச்சரிற்குக் காணி அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதா? இதுவும் ஓர் அதிகார துஸ்பிரயோகமே.
இனி சுகாதார அமைச்சிற்கும், மீன்பிடி மற்றும் போக்குவரத்து அமைச்சிற்கும் வருகின்றேன்
அது மட்டுமல்ல தர்மபுரம் வைத்தியசாலையின் அபிவிருத்திக்கென்று பிரதேச செயலாளரினால் ஒதுக்கப்பட்டு, அக் காணியில் குடியிருந்தவர்களிற்கு அக் காணியில் உடமை கொள்வதற்கோ, இடம் கொள்வதற்கோ உரித்து இல்லை என நீமன்றத்தினால் மார்ச் 2015இல் உறுதிப்படுத்தப்பட்ட நிலையிலும், நீண்ட காலமாக மக்கள் அங்கு குடியிருந்ததைக் கருத்திலெடுத்து சிறு துண்டு காணியேனும் வழங்க காணிக் கோரிக்கை அறிவித்தல்களை வழங்கி உரிய ஆவணங்களை வழங்க உதவுமாறு பெப்ரவரி 2016 இல் முன்னாள் கல்வி அமைச்சர் பிரதேச செயலரிற்குக் கடிதம் எழுதி இருக்கின்றார். காணி தொடர்பான விடயங்களை நீதிமன்றம் கையாளுகின்ற நிலையில் இது தொடர்பாக பிரதேச செயலாளரிற்கு எழுதுவதற்கு கல்வி அமைச்சரிற்கு என்ன அதிகாரம் உண்டு? இது அதிகார துஸ்பிரயோகம் இல்லையா? சுகாதார அமைச்சரும் இதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும். ஏனெனில் நீங்களும் வைத்தியசாலைக்கு ஒதுக்கப்பட்ட காணியை தனியாரிற்குப் பிரித்துக் கொடுப்பதற்கு உடந்தையாக இருந்திருக்கின்றீர்கள். காணியற்றவர்களிற்குக் காணி கொடுப்பதற்கு நான் எதிரானவன் அல்ல. ஆனால் வைத்தியசாலைக்கு என்று ஒதுக்கப்பட்ட காணியை தனிப்பட்டவர்களிற்குக் கொடுப்பதில் சம்பந்தப்பட்டிருக்கின்றீர்கள். அதைத்தான் நான் இங்கு சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்.
சுகாதார அமைச்சிற்கு 2015 இல் துளுனுகு செயற்றிட்டத்தின் கீழ் வட மாகாணத்தில் போஷக்கு உணவு வேலைத்திட்டத்திற்கு (Nutrition Intervention) எனக் கொடுக்கப்பட்ட நிதியில் ரூ.9.4/- மில்லியன் இற்கு ஓர் வாகனம் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. மக்களின் போஷhக்கின்மையை நீக்குவதற்குப் பதிலாக, அதிகாரிகள் தங்களின் போதாக் குறையை நிறைவேற்றியுள்ளனர், இது கணக்காய்விற் கூடச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. (பக்கம் 22)
மீன்பிடி போக்குவரத்து அமைச்சினால் செயற்படுத்தப்பட்ட தடுப்புக் காவலிலிருந்து விடுவிக்கப்பட்டவர்களிற்கான விஷேட தேவைகளிற்குச் செலவழிக்கப்பட்ட ரூ.43/- மில்லியன் தொடர்பாகக் கணக்காய்வில் பல குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. நாங்கள் சட்டத்திற்கு மதிப்பளித்துத்தான் சமூக செயற்பாடுகளைச் செய்ய வேண்டும். அதில் பல தவறுகள் இழைக்கப்பட்டுள்ளதாகக் கணக்காய்வு அறிக்கை சுட்டிக் காட்டுகின்றது. (பக்கம் 22).
நிறைவேற்று செயற்பாட்டுக் குறைபாடுகளில் இறுதி விடயமாக விசாரணைக் குழு அறிக்கை தொடர்பாக ஓரிரு விடயங்களைக் குறிப்பிட விரும்புகின்றேன்.
விசாரணைக் குழுவின் உறுப்பினர்கள் பக்கச் சார்பானவர்கள், ஒவ்வோர் கட்சியைச் சார்ந்தவர்கள், இவ்விசாரணையை நடாத்துவதற்குத் தகுதியுடையவர்களல்லர் என்ற கருத்து சில ஊடகங்களிலும் சமூக வலைத் தளங்களிலும் வேண்டுமென்றே விசமத்தனமாகப் பிரசுரிக்கப்பட்டு வருகின்றது. ஓர் அமைச்சரின் தூண்டுதலினாலேயே இவ்வாறான பிரச்சார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக எனக்கு அறியக் கிடைக்கின்றது. விசாரணைக் குழு அங்கத்தவர்கள் இவ் விசாரணையை நடாத்துவதற்குப் பொருத்தமற்றவர்கள் என்று கருதியிருந்தால் விசாரணைக் குழு உறுப்பினர்களின் பெயர்கள் சபைக்கு கௌரவ முதலமைச்சர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட வேளையிலேயே அதற்கான தங்கள் ஆட்சேபனையைத் தெரிவித்திருக்க வேண்டும். அவ்விசாரணைக்குழுவை ஏற்றுக் கொண்டு, அதன் முன் ஆஜராகி விளக்கங்கள் கொடுத்துவிட்டு இன்று அவ்வுறுப்பினர்கள் மீது குறைகூறுவது மிகவும் கீழ்த்தரமான ஓர் பண்பற்ற செயலென்பதனை நான் முதலில் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றேன்.
விசாரணைக் குழுவின் அறிக்கையில் அமைச்சின் செயலாளரிற்கு வழங்கப்பட்ட நிர்வாக ரீதியலான கடமைகளில் அமைச்சர் வாரியம் தலையிடுவது தவறானதாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதுடன், கொள்கை ரீதியலான முடிவுகளை எடுப்பதே அமைச்சர்களினதும், அமைச்சு வாரியத்தினதும் கடமையெனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அவர்களின் இக் கருத்துடன் நான் முழுமையாக உடன்படுகின்றேன். அது மட்டுமல்ல பல இடங்களில் அமைச்சர் வாரியத்தின் அனுமதியுடன்தான் சில அதிகார துஷ;பிரயோகங்கள் நடைபெற்றுள்ளனவென்றும் அவ் அறிக்கையிலிருந்து அறியக் கூடியதாக இருக்கின்றது. ஆதலினால் அவ் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள பல அதிகார துஷ;பிரயோகங்களிற்கு ஏற்கனவே இராஜினாமா செய்து கொண்ட இரு அமைச்சர்கள்; மட்டுமல்ல, முழு அமைச்சரவையுமே பொறுப்பு நிற்க வேண்டும் என்பதனையும் நான் இங்கு கூறி வைக்க விரும்புகின்றேன்.
கௌரவ அவைத் தலைவர் அவர்களே இது வரை நிறைவேற்று மற்றும் நிர்வாகச் செயற்பாட்டின் கடந்த காலக் குறைபாடுகளை எடுத்துக் கூறியிருந்ன், இனி நான் ஆரம்பத்திற் கூறியது போன்று என்னென்ன விடயங்களைச் செய்திருக்க முடியும் என்ற விடயத்திற்கு வருகின்றேன்.
சுகாதார சேவைகள், கல்வி நியதிச்சட்டங்கள் உருவாக்கப்பட்டு ஒரு வருடத்திற்கு மேலாகியும் இதுவரை உபவிதிகளெதுவும் வர்த்தமானியில் அறிவிக்கப்படவில்லை. அந் நியதிச் சட்டங்களிற்கு அமைய திருத்தப்பட்டவாறான 1952ம் ஆண்டின் 12ஆம் இலக்க சுகாதார சேவைகள் சட்டமும் கல்விக் கட்டளைச் சட்டமும் (அத்தியாயம் 381) வட மாகாணத்தில் கடந்த வருட ஆரம்பத்திலிருந்து செல்லுபடியற்றது. இச் சட்ட மூலங்களின் தத்துவங்களின் அடிப்படையில் மத்திய அமைச்சுகளினால் வெளியிடப்பட்ட சுற்றுநிருபங்களெதுவும் எம் மாகாணத்தில் செல்லுபடியற்றவை. அதே போல் பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் தத்துவத்தின் கீழ் வெளியிடப்பட்ட சுற்று நிருபங்களோ அல்லது சேவைப் பிரமாணக் குறிப்புகளோ எமது மாகாணத்தில் செல்லுபடியற்றவை. ஆனால் மத்திய அரசின் சுற்றறிக்கைகளையும், பொதுச் சேவை ஆணைக் குழுவின் தத்துவத்தின் கீழ் வெளியிடப்பட்ட சுற்றுநிருபங்களையும்;, சேவைப் பிரமாணக் குறிப்புகளையும் இன்னும் பாவித்துக் கொண்டிருக்கின்றீர்கள். இதனை எத்தனை முறை நான் எடுத்துக் கூறியிருக்கின்றேன். இதனைக் கூட விளங்கி எங்களிற்கு வேண்டிய சுற்று நிருபங்களையும், சேவைப் பிரமாணக் குறிப்புகளையும் உங்களால் தயாரிக்க முடியாமலிருக்கின்றது. அதிகாரங்கள் போதாதென்று தீர்மானங்கள் எடுத்துக் கொண்டிருக்கின்றோம், ஆனால் இருக்கும் அதிகாரங்களை முறையாகப் பிரயோகிக்கத் தெரியாமல் இருக்கின்றோம்.
மூன்று மாதங்களின் முன் ஓர் தூதரக அரசியற் பிரிவு உயர் அதிகாரி எம்மை வந்து சந்தித்திருந்தார். நாம் அவரிடம்எமது காணிப்பிரச்சினை, காணாமற்போனோர் பிரச்சினை இவ்வாறான எமது உரிமை மறுப்பு தொடர்பான பல விடயங்களை எடுத்துக் கூறியிருந்தோம். ஆனால் அவர் எங்களை நோக்கிக் கேட்ட கேள்வி ‘உங்களிற்கு இருக்கின்ற அதிகாரங்களை நீங்கள் சரியாக உங்கள் வசமாக்கியிருக்கின்றீர்களா?’ இதுவரை எத்தனை நியதிச்சட்டங்களை ஆக்கியிருக்கின்றீர்கள் என்று எம்மைப் பார்த்துக் கேட்டார். அது மட்டுமல்ல, எமக்கு நியதிச்சட்டங்களை உருவாக்குவதற்கு உதவி செய்வதற்காக நிபுணர்களைக் கொண்ட ஓர் நிறுவனத்திற்குத் தமது அரசு நிதியுதவி வழங்கியுள்ளதாகவும், அந் நிறுவனத்தினைப் பாவித்து நியதிச் சட்டங்களை உருவாக்குவதற்குத் தவறியுள்ளோம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்கள்;.
நான் 2014ஆம் ஆண்டு இச் சபையில் உரையாற்றும் போது கூறியிருந்தேன், என்னால் ஒரு மாதத்திற்கு 4 நியதிச் சட்டங்களை ஆக்கிக் காட்ட முடியுமென்று. கடந்த 45 மாதங்களாக எத்தனை நியதிச்சட்டங்களை ஆக்கியிருக்கின்றீர்கள்? இது தங்கள் இயலாத்தன்மையில்லையா?
முன்பள்ளி நியதிச் சட்டம் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டது. அந் நியதிச் சட்டத்திற்கு அமைவாக முன்பள்ளிகளைப் பதிவு செய்வதற்கு இது வரை என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளீர்கள் எனக் கூற முடியுமா?
கௌரவ முதலமைச்சர் அவர்கள் காணி அமைச்சர் என்ற முறையில் மயிலிட்டிக் காணிகள் அண்மையில் இராணுவத்தினரால் விடுவிக்கப் பட்ட போது தனக்கு அரச அதிபர் அறிவிக்கவில்லையென முறைப்பட்டுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன். காணி அமைச்சரென்பது அரச காணிகள் தொடர்பான பாவனை, கையளித்தல், போன்ற விடயங்களிற்கான அமைச்சரேயன்றி தனியார் காணிகளிற்கான அமைச்சர் அன்று. காணி அமைச்சர் என்ற முறையில் மயிலிட்டிக் காணியைக் கையளிப்பதற்கு உரிமை கோருவதிலும் பார்க்க அரச காணி தொடர்பான அதிகாரங்களை வலுப்படுத்துவதற்கு இது வரை ஏன் ஓர் நியதிச் சட்டத்தினை உருவாக்க முடியவில்லை? மேல் மாகாண சபை கூட காணி தொடர்பாக ஓர் நியதிச் சட்டத்தை உருவாக்கியுள்ளது. அதே போல் வட மேல் மாகாண சபை மீன்பிடி கடலெல்லைகள் தொடர்பாக நியதிச்சட்டம் இயற்றியிருக்கின்றது. நாங்கள் இருக்கும் அதிகாரங்களைப் பாவிக்கத் தெரியாமல் ஏதோ விடயங்களில் எமது கவனத்தைச் செலுத்திக் கொண்டு இருக்கின்றோம்.
நான் 2014ஆம் ஆண்டே இச் சபையில் கூறியிருந்தேன், சட்டம், ஒழுங்கு கௌரவ முதலமைச்சர் அவர்களிற்குரிய அதிகாரம், அந்த அதிகாரத்தைப் பாவியுங்கள், பொலிஸ் அதிகாரிகளை அழைத்துச் சட்டம், ஒழுங்கு தொடர்பாக கட்டளையிடுங்களெனக் கேட்டிருந்தேன்;. கடந்த வெள்ளிக் கிழமை பொலிஸ் அதிகாரிகளை அழைத்து அவ்வாறான கூட்டமொன்றை நடாத்தியதாக அறிகின்றேன், காலந் தாழ்த்தியாவது ஞானம் பிறந்தமைக்கு எனது வாழ்த்துகள்.
அதே போல் நான் எத்தனையோ தடவை இச்சபையிற் கூறி இருக்கின்றேன். பயணிகள் மற்றும் பண்டங்களை ஏற்றிச் செல்லுதல் முழுக்க முழுக்க மாகாண சபைக்குரிய விடயம். அதனை ஒழுங்குபடுத்துவதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் மாகாண சபைக்கு முழு அதிகாரமும் உள்ளது. இது தொடர்பாக நாம் என்ன செய்துள்ளோம், அமைச்சர் ஓர் வீதிப்போக்குவரத்து அதிகார சபையை நிறுவுவதற்கான நியதிச்சட்டத்தைக் கொண்டு வந்தார். இன்று அவ் அதிகார சபை கிடப்பிற் கிடக்கின்றது.
நியதிச் சட்டங்கள் மட்டுமல்ல, மாகாண சபை செய்திருக்க வேண்டிய இன்னுமோர் முக்கியமான விடயம் வட மாகாண அபிவிருத்திக்கான துறை சார் ஒன்றிணைந்த அபிவிருத்தித் திட்டங்களை (Integrated Master Development Plan) வகுத்திருக்க வேண்டும். உதாரணத்திற்கு இன்று கல்வியில் எங்கள் மாகாணம் இலங்கையில் கீழ் நிலையில் உள்ளது. இதனை முன்னேற்றுவதற்கு இது வரை என்ன திட்டங்கள் முன்வைத்திருக்கின்றீர்கள்? பின்னடைவுக்கான வியாக்கியானங்கள் தேடிக் கொண்டிருக்கின்றீர்களே தவிர முன்னே கொண்டு செல்வதற்கான திட்ட முன்மொழிவுகள் ஏதாவது முன்வைத்துள்ளீர்களா? இதே போன்றுதான் ஒவ்வொரு துறையிலும்.
இவ்விடயத்தில் சுகாதார அமைச்சர் ஒருவர்தான் சுகாதாரத் துறை மேம்பாட்டிற்கான ஓர் திட்டமிடலைச் செய்திருக்கின்றார். இணைந்த வடக்கு கிழக்கில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாகாண சபை 01 வருடங்கள் 04 மாதங்கள் மாத்திரந்தான் இயங்கியது. ஆனால் அக் குறுகிய காலத்திற்குள் ஒவ்வொரு துறையின் மேம்பாட்டிலும் ஓர் மாஸ்டர் பிளான் போட்டிருந்தனர். அவர்கள் 16 மாதத்தில் செய்து காட்டியதனை உங்களால் 45 மாதங்களாக செய்யமுடியாமலிருக்கின்றது.
ஒவ்வொரு துறைக்கும் ஒரு மாஸ்டர் பிளானைச் செய்து விட்டுத்தான் அதனை நடைமுறைப்படுத்துவதற்கான நிதிகளை முன்னுரிமை அடிப்படையில் எவ்வாறு பெற வேண்டுமென்ற முயற்சிகளில் ஈடுபடல் வேண்டும். இதுதான் ஓர் திறனுள்ள நிர்வாகத்தின் செயற்பாடாக அமைய முடியும். இவ்விடயத்தில் மீண்டும் நான் சுகாதார அமைச்சரிற்குப் பாராட்டுத் தெரிவிக்க விரும்புகின்றேன். அவர் சுகாதாரத் துறையின் அபிவிருத்திக்கான ஓர் திட்டமிடலை வகுத்தது மட்டுமல்லாது அதன் ஓர் பகுதியை நடைமுறைப் படுத்துவதற்கு ரூ.14,000/- மில்லியன் நிதியைக் கூடப் பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளார். இது எமது மாகாண சபைக்கு வருடாந்தம் கிடைக்கும் மொத்த மூலதன நிதியின் இரு மடங்கை விட மேலானது.
துறைசார் Development Plan மட்டுமல்ல எமது மாகாணத்;தைப் பொருளாதார அபிவிருத்தியில் முன்னேற்றுவற்குக் கூட நாம் வேலைத்திட்டங்களை மேற்கொண்டிருத்தல் வேண்டும். எமது பிரதேசத்தில் முதலீட்டு வாய்ப்புகளை அடையாளங் கண்டு அம் முதலீடுகளைச் செய்வதற்குரிய பூர்வாங்க சாத்தியக் கூற்று அறிக்கைகளைத் (Preliminary Feasibility Report) தயாரித்து வெளிநாட்டு முதலீட்டாளர்களைக் குறிப்பாகப் புலம்பெயர் தமிழர்கள், முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்க வேண்டும். அதற்குப் பதிலாக சிங்கள அரசு முதலீடு செய்ய முட்டுக்கட்டையாக உள்ளது, எமது சுற்றுச் சூழலைப் பாதிக்க விட மாட்டோம் என்ற கோசங்களை எழுப்பிய வண்ணமிருந்தோமேயானால் நாம் முன்னேற முடியாது.
இன்று எமது பிரதேசத்தில் இளைஞர்களிற்கான வேலையில்லாப் பிரச்சினை ஒர் பாரிய பிரச்சினையாக இருக்கின்றது. நிச்சயமாக அவர்களது பிரச்சினை தீர்க்கப்பட வேண்டிய ஒன்று. அவர்களிற்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது எமது கடமை. எமது மாகாணத்தில் முதலீட்டு வாய்ப்புகளை ஏற்படுத்திப் பொருளாதார அபிவிருத்திக்கான முனைப்புகளை செய்தால் மட்டுமே இது சாத்தியம் ஆகும்.
பதவிகளைக் காப்பாற்றுவதிலும், பகிர்ந்து கொள்ளலிலுமே எமது காலத்தை வீணடிக்கின்றோமே தவிர மக்களிற்கு ஆக்கபூர்வமான செயற்பாடுகளை மேற்கொள்வதிலோ, இருக்கின்ற மாகாண சபையை வினைத்திறனாக செயற்படுத்த அல்ல என்பதனைக் கூறி எனது உரையை நிறைவு செய்கின்றேன்.