நாட்டின் இளைஞர் யுவதிகள் சமூக வலைத்தளங்கள் ஊடாக பல்வேறு பிரச்சினைகள் விடயத்தில் ஆர்வம் காட்டுகின்ற போதிலும் தேர்தல்களில் வாக்களிப்பதில்லை என ஆய்வுகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு லக்ஷ்மன் கதிர்காமர் சர்வதேச கற்கைகள் நிறுவனத்தில் நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற சமூக ஊடக வலைத்தளம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு ஊரையாற்றும் போது பிரதியமைச்ர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர் ,
” நாட்டின் இளைஞர் யுவதிகள் சமூக வலைத்தளங்கள் ஊடாக பல்வேறு பிரச்சினைகள் விடயத்தில் ஆர்வம் காட்டுகின்ற போதிலும் தமது வாக்குரிமையைப் பயன்படுத்துவதில் அந்தளவுக்கு ஆர்வம் காட்டுவதில்லை.
நாட்டில் 40 சதவீதமான இளைஞர் யுவதிகள் வாக்களிப்பதில்லை என ஆய்வுகளில் இருந்து தெரியவந்துள்ளது. இது ஜனநாயகத்திற்கு உகந்த விடயமல்ல. இவர்கள் பிரதான ஊடகங்களையும் விட சமூக ஊடகங்களில் கூடுதல் கவனம் செலுத்துகின்றனர்.
இளைஞர் யுவதிகளை சிறந்த குணநலன் மிக்கவர்களாக உருவாக்குவதற்கு சமூக ஊடக செயற்பாட்டாளர்களும் கொள்கை வகுப்பாளர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டு” என தெரிவித்துள்ளார்.