வடமாகாண போக்குவரத்து மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரன் தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கப்படுமென வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஷ்வரன் அறிவித்துள்ளார்.
வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் தொடர்பாக அவர் பிரதிநிதித்துவம் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் ந.ஸ்ரீகாந்தாவினால் அனுப்பி வைக்ககப்பட்ட கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையில் முதலமைச்சர் விக்கினேஸ்வரனால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அனுப்பிய பதில் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
உங்கள் கடிதம் கிடைத்தது. அதன் உள்ளடக்கங்கள் கவனத்தில் எடுக்கப்பட்டன. ஏற்கனவே அமைச்சர் பா.டெனிஸ்வரன் எமது விசாரணைக்குழு முன் தான் ஆஜராகமாட்டார் என்று பகிரங்கமாகக் கூறியதை முன்வைத்தும் வேறு காரணங்களுக்காகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்திருந்தேன். எனவே, உங்கள் பரிந்துரைகளும் கவனத்தில் எடுக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதைத் தங்களுக்குத் தெரியப்படுத்துகின்றேன் என்றுள்ளது.
முன்னதாக வவுனியாவில் நடைபெற்ற தமிமீழ விடுதலைக் கழகத்தின் தலைமைக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக கடந்த 13ஆம் திகதி அவ்வியக்கத்தின் செயலாளர் ந.சிறீக்காந்தா, எமது கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி வடக்கு மாகாண சபையில் தங்கள் தலைமையில் அமைந்துள்ள அமைச்சரவையில் தொடர்ந்து அங்கம் வகிப்பதற்கான சகல தகுதிகளையும் பா.டெனீஸ்வரன் இழந்து விட்டிருப்பதாக எமது கட்சி தீர்மானித்துள்ளது.
பா.டெனீஸ்வரனை அமைச்சரவையில் இருந்து நீக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறும் அவருக்குப் பதிலாக எமது கட்சியினால் பரிந்துரைக்கப்படும் வடக்கு மாகாண சபை உறுப்பினரை அமைச்சராக நியமிக்குமாறு தங்களைக் கோருவதற்கு கட்சி மேலும் தீர்மானித்துள்ளது. டெனீஸ்வரனை அமைச்சரவையில் இருந்து நீக்கும் நடவடிக்கையை முன்னெடுக்குமாறு வேண்டிக் கொள்கின்றேன். தங்கள் அமைச்சரவைக்கான எமது கட்சியின் பிரதிநிதியின் பெயரை உரிய நேரத்தில் அறியத்தருவோம் எனக் குறிப்பிட்டு கடிதமொன்றை அனுப்பியிருந்தார் இந்த விடயம் குறித்து இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை.சோ.சோனாதிராஜா, எதிர்க்கட்சித்தலைவரும் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் ஆகியோருக்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தையும் குறிப்பிடத்தக்கது.