ஆவா குழு மீண்டும் அட்டகாசம்: உள்ளூராட்சி ஆணையாளர் உட்பட நால்வர் படுகாயம்!!

ஈச்சமோட்டை பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவமொன்றில் நால்வர் படுகாயமடைந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு (வெள்ளிக்கிழமை) மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு சம்பவமானது ஆவா குழுவுடன் தொடர்புடைய சந்தேகநபர்களினாலேயே முன்னெடுக்கப்பட்டிருப்பதாக சந்தேகம் வெளியாகியுள்ளது.

யாழ்ப்பாணம் ஈச்சமோட்டை குளத்தடிப்பகுதியில் உள்ள யாழ்.மாவட்ட உள்ளூராட்சி ஆணையாளரது வீட்டிற்குள்ளும், அருகிலிருந்த மற்றுமொரு வீட்டினுள்ளும் அத்துமீறி நுழைந்த மர்ம நபர்கள் வீட்டில் இருந்தவர்களை தாக்கியதுடன், வீட்டு உபகரணங்களையும் சேதப்படுத்தியுள்ளனர். தாக்குதலில் யாழ்.மாவட்ட உள்ளூராட்சி ஆணையாளர், அவரது மகள் உள்ளிட்ட நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ். பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts