நெடுந்தீவு குதிரைகளைப் பாதுகாக்கும் வழிமுறைகள் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கும் பொருட்டு வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் குழுவொன்றை நியமித்துள்ளார். நெடுந்தீவில் அண்மையில் வரட்சி காரணமாகக் குதிரைகள் இறந்துள்ளன என்ற செய்தி ஊடகங்களில் வெளியானதையடுத்தே முதலமைச்சரால் இந்த விசேட குழு அமைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சரும் மாகாணசபை உறுப்பினருமான பொ.ஐங்கரநேசன் தலைமையிலான இக்குழுவில் மாகாணசபை உறுப்பினர்கள் விந்தன் கனகரத்தினம், வை.தவநாதன், பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ந.திருலிங்கநாதன், நெடுந்தீவு பிரதேச செயலாளர் சி.ஜெயகாந்தன், நெடுந்தீவு பிரதேசசபை செயலாளர் கு.இரட்ணராஜா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
குழுவில் இடம்பெற்றுள்ளவர்களுக்கான நியமனக் கடிதங்களை முதலமைச்சர் வழங்கி வைத்துள்ள நிலையில், இவர்கள் நேற்று வியாழக்கிழமை (13.07.2017) நெடுந்தீவுக்குச் சென்றுள்ளனர்.
அங்கு குதிரைகள் வாழுகின்ற பிரதேசங்களில் கள ஆய்வுகளை மேற்கொண்டதோடு, பிரதேச செயலகத்தில் கலந்துரையாடலையும் மேற்கொண்டுள்ளனர். இக்கலந்துரையாடலில் திணைக்களத் தலைவர்கள், பொதுஅமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தார்கள். இக்குழுவினர் நெடுந்தீவுக் குதிரைகளை அழிவில் இருந்தும் பேணிப் பாதுகாப்பதற்கான வழிமுறைகளை அடையாளங்கண்டு, தமது அறிக்கையை இரண்டு வார காலத்தினுள் முதலமைச்சரிடம் கையளிக்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெடுந்தீவுக் குதிரைகள் போத்துக்கேயரது ஆட்சிக் காலத்தில் அவர்களால் எடுத்துவரப்பட்ட குதிரைகளின் வழித்தோன்றல்கள் ஆகும். மிக நீண்டகாலமாக நெடுந்தீவில் வாழுகின்ற இக்குதிரைகள் இப்பிராந்தியத்துக்குரிய தனித்துவமான ஒரு ரகமாக உயிரியலாளர்களால் அடையாளப் படுத்தப்பட்டுள்ளன. சுற்றுலாச் சிறப்பு மிக்க நெடுந்தீவில், இக்குதிரைகளும் சுற்றுலாப் பயணிகளைக் கவருகின்ற உயிரியற் சொத்தாகவும் இருப்பதால் இவற்றைப் பேணிப்பாதுகாக்க வேண்டும் என்ற கருத்து பலராலும் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.