தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்ய முயற்சித்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களின் விளக்கமறியல் வரும் 26 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு, கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிவான் முன்னிலையில் நேற்று (புதன்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
குறித்த, சந்தேக நபர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள போதைப்பொருள் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் குறித்த விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன என பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் நீதிமன்றில் முன்னர் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த, குறித்த ஐந்து சந்தேக நபர்களையும் கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.
இதேவேளை, அண்மையில் அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது, சந்தேகநபர்களில் ஒருவருக்கு சில சிறைச்சாலை உத்தியோகஸ்தர்கள் தாக்கிய சம்பவம் தொடர்பில், விசாரணை செய்து அறிக்கை ஒன்றை சமர்பிக்குமாறும் சிறைச்சாலை அதிகாரிக்கு பணிப்புரை விடுக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த விசாரணை அறிக்கையும் மன்றில் சமர்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.