வடக்கு கிழக்கில் காலூன்ற தென்னிலங்கை கட்சிகள் முயற்சி! : செல்வம் எம்.பி

தென்னிலங்கை கட்சிகள் இன்று வடக்கு – கிழக்கில் காலூன்றி தமது கட்சியின் வளர்ச்சியை எதிர்பார்த்து காத்திருக்கின்ற நிலையில், தமிழ் தலைமைகள் வேறுபாடுகளை கலைந்து ஒற்றுமையுடன் செயற்படுவது அவசியமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

தற்கால அரசியல் நிலைமைகள் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் அபிலாசைகளை பிரதிபலிக்கக்கூடிய வகையிலான அரசியல் அமைப்பொன்றினை உருவாக்கும் முயற்சி இடம்பெற்று வருகின்ற நிலையில், சர்வதேசத்தின் உறுதுணையுடன் தீர்வுக்கான வழிவகைகளை ஏற்படுத்த முனைப்பு காட்ட வேண்டிய தார்மீக பொறுப்பு தமிழ் தலைமைகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதென்றும் செல்வம் அடைக்கலநாதன் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அரசியலமைப்பு உருவாக்கத்தில் தென்னிலங்கை சக்திகள் குழப்பத்தினை ஏற்படுத்தி தேசிய இனங்களான தமிழ் மற்றும் முஸ்லிம் இனங்களுக்கான நிம்மதியான எதிர்காலத்தினை ஏற்படுத்த தடையாக உள்ளனர் எனக் குறிப்பிட்டுள்ள செல்வம் அடைக்கலநாதன், மாற்றுத்தலைமை என்ற எண்ணக்கருவை கலைந்து செயற்படவேண்டும் என்ற வடக்கு முதலமைச்சரின் கால சூழலை உணர்ந்த கருத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழ் தலைமைகள் செயற்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

அவ்வாறின்றி, வடக்கு கிழக்கில் தமிழ் தலைமைகள் மீதான அதிருப்தி ஏற்படுமாயின் தென்னிலங்கை கட்சிகள் வளர்ச்சியடைவதற்கு காரணமாக அமையும் என்றும், இவ்வாறான நிலை தமிழர்களின் எதிர்கால வாழ்வியலையும் அரசியல் ரீதியான முன்வைப்புகளையும் கேள்விக்குட்படுத்தும் என்பதுடன் அரசியல் ரீதியான கோரிக்கைகளும் ஆக்கபூர்வமற்றதாக்கிவிடும் என்றும் செல்வம் அடைக்கலநாதன் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Posts