யாழ். பருத்தித்துறை துன்னாலை பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரை சுட்டுக்கொன்ற சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட பொலிஸ் அதிகாரிகள் இருவரையும், எதிர்வரும் 24ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட பருத்தித்துறை பொலிஸ் நிலைய உதவி பொலிஸ் அத்தியட்சகரும், பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் நேற்று (திங்கட்கிழமை) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது, நீதவான் நளினி சுபாஸ்கரன் இவ் உத்தரவை பிறப்பித்துள்ளார்.
சந்தேகபர்களை அநுராதபுரம் சிறைச்சாலைக்கு கொண்டுசெல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வடமராட்சி கிழக்கு மணல்காடு பகுதியில் பொலிஸாரால் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், யோகராசா தினேஸ் (வயது-24) என்ற இளைஞன் கொல்லப்பட்டுள்ளார்.
சட்டவிரோதமாக மணலேற்றிச் சென்ற லொறியொன்று பொலிஸாரின் சமிக்ஞையை மீறிச் சென்றதாகவும், அதன் பின்னரே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும், பொலிஸாரின் கருத்தில் எவ்வித உண்மையும் இல்லையென தெரிவிக்கும் பிரதேச மக்கள், துன்னாலை பொலிஸ் காவலரண் மற்றும் நெல்லியடியிலுள்ள பொலிஸ் அதிகாரியின் வீடு ஆகியவற்றை சேதப்படுத்தியுள்ளனர்.
அப்பிரதேசத்தில் மக்கள் தொடர்ந்தும் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நிலையில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.