புதிய அரசியலமைப்பில் சமஷ்டி, வடக்கு- கிழக்கு இணைப்பு ஆகியவற்றிற்கு வாய்ப்பே இல்லை என தேசிய கலந்துரையாடல்கள், சமூக நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
புதிய அரசியல் யாப்பையும் காணாமல் போனோர் அலுவலகத்தையும் உடனடியாக கைவிடுமாறு மகாநாயக்க தேரர்கள் தெரிவித்திருந்தமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவித்த அமைச்சர், புதிய அரசியலமைப்பொன்று அவசியமில்லை, தேர்தல் முறையில் மாத்திரமே மாற்றம் தேவையென மகாநாயக்க தேரர்கள் தெரிவித்துள்ளனர். அவர்களின் கருத்தை நாம் மதிக்கின்றோம்.
ஆனால், அதிகாரப் பரவலாக்கள், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமைய ஒழித்தல், தேர்தல் முறை மாற்றம் உள்ளிட்ட விடயங்களை செய்ய வேண்டும் என்பது மக்களின் ஆணை.
அரசியலமைப்பு தொடர்பில் தவறான பிரசாரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. எனவே இது தொடர்பில் சரியான தெளிவுபடுத்தல்களை மேற்கொள்ளல் அவசியம்.
புதிய அரசியலமைப்பின் ஊடாக வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படாது. மேலும் தற்போது நடைமுறையிலுள்ள யாப்பிற்கு அமைய, பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமையை நாம் இல்லாமல் செய்யப்போவதும் இல்லை.
எனினும் அதிகாரப் பரவலாக்கள், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழித்தல் உள்ளிட்ட விடயங்களை முன்னிறுத்தி புதிய அரசியலமைப்பு உருவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன எனக் குறிப்பிட்டார்.