வடக்கு மாகாணத்தில் தொண்டர் ஆசிரியர்களாகக் கடமையாற்றாதவர்களை, தொண்டர் ஆசிரியர்களாகக் கடமையாற்றுகின்றனர் என்று போலியான உறுதிப்பத்திரங்களை வழங்கிய பாடசாலைகளின் அதிபர்களும், அதனை உறுதிப்படுத்தியவலயக் கல்விப் பணிப்பாளர்களும் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.
விரைவில் இந்த விசாரணை நடத்தப்படும் என்று வடக்கு மாகாண க் கல்வி அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன் தெரிவித்தார். தகுதியற்ற தொண்டர்களுக்கு உறுதிப்படுத்தல் கடிதம் வழங்கிய அதிபர்களுக்கும் அதனை உறுதிப்படுத்திய வலயக் கல்விப்பணிப்பாளர்களுக்கும் எதிராக உரிய நடைமுறைகளின் பிரகாரம் திணைக்கள ரீதியிலான விசாரணை நடத்தப்படும்.
நியமனம் வழங்கலில் உள்ள விதிமுறைகளில், தொண்டராசிரியர்கள் 2011 டிசெம்பர் முதலாம் திகதிக்கு முன்பிருந்து தொடர்ச்சியாகப் பணியாற்றியிருக்க வேண்டும் என்ற நிபந்தனையுண்டு. ஆனால் பலர் 2011 ஆம் ஆண்டிலேயே உயர்தரப் பரீட்சைக்கு முதல் தடவையாகவும், மேலும் சிலர் இரண்டாவது தடவையாகவும் தோற்றியுள்ளனர். அவ்வாறிருந்தும் பாடசாலைகளின் அதிபர்கள் உறுதிப்படுத்தல் கடிதம் வழங்கியுள்ளனர். இது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என்று அவர் மேலும் தெரிவித்தார்.