வடக்கில் முழுமையான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டியது அவசியமாகும் என மகளிர் மற்றும் சிறுவர் விவகார பதில் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தலைமையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்படி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
‘சிலர் குழப்புகின்றனர் என்று கூறி வடக்கில் வேலைத்திட்டங்களை கைவிடக் கூடாது. வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் பேரூந்து நிலையம் அமைப்பதற்கு இடம் ஒதுக்கி தந்தேன். ஆனால் அதற்கான நடவடிக்கைகள் இன்னமும் மேற்கொள்ளப்படவில்லை. வடக்கு, கிழக்கு மாகாண விடயத்தில் அமைச்சர்கள் உரிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார்.
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சந்திராணி பண்டார உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இருவாரகாலம் வெளிநாடு சென்றுள்ள நிலையில் பதில் அமைச்சராக இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.