தடுமாறாத தமிழர்களுக்கு தலைமை ஏற்பது யார்? : யாழில் கலந்துரையாடல்

‘தடுமாறாத தமிழர்களிற்கு தலைமை ஏற்பது யார்?’ எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 9ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கருத்துப்பகிர்வு கலந்துரையாடலொன்று நடைபெறவுள்ளது.

மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் கலைத்தூது மண்டபத்தில் இந்த கருத்துப் பகிர்வு இடம்பெறவுள்ளதாக மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்தார்.

குறித்த கருத்துப்பகிர்வு குறித்து அவர் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்-

”இன விடுதலைக்கான அரசியல் பயணத்தில் தமிழ் மக்கள் பல்வேறு விதமான இழக்க முடியாத இழப்புக்களுடன் வழி நெடுக வலி சுமந்த வாழ்வாகவே விதி நிர்ணயம் ஆகிவிட்ட வேளையில், 2009ஆம் ஆண்டிற்குப் பின்னர் வலிமையற்ற தலைமையால் தமிழ் மக்கள் நிலைகுலைந்து போயுள்ளனர்.

எமது விடுதலைக்கான பயணம் இன்னும் முடிவுறாமையினால் நாம் ஏனோ தானோ என அசட்டை கொள்ள முடியாது. எமக்கு எல்லோருக்கும் கூட்டுப்பொறுப்புண்டு.

ஆகவே கருத்தியல்வாதிகள், முற்போக்கு சிந்தனையாளர்கள், இளையோர்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து தடுமாறும் தலைமைகளின் நிலைப்பாடு தொடர்பிலும் எமது மக்களின் எதிர்கால இன விடுதலையின் விசுவாசப்பயணம் தொடர்பிலும் தீர்க்கமான முடிவுக்கு வரவேண்டிய இக்கட்டான கால சூழ்நிலை ஏதுவாக நிலவுவதால், ஆரோக்கியமான கருத்துப்பகிர்வுக்கு தமிழ்த்தேசிய தார்மீக உரிமையுடன் அணிதிரண்டு வருமாறு அனைவரையும் அழைக்கின்றோம்” என தெரிவித்துள்ளார்.

Related Posts