மாகாணத் தெரிவுக்குழு விசாரணை செய்யாவிடின் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராவேன்: சத்தியலிங்கம்

மாகாணத் தெரிவுக்குழு என்னை முழுமையாக விசாரணை செய்யாவிடின் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் நானாகச் சென்று ஆஜராவேன் என வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அமைச்சரின் ஊடகப்பிரிவினால் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“மக்கள் தங்கள் வாக்குப்பலத்தினால் தங்களுக்கு சேவை செய்யவே எங்களைத் தெரிவுசெய்துள்ளனர். அவர்களுக்கு பதில்சொல்லவேண்டிய கடப்பாடு எனக்கு உள்ளது.

மக்கள் மனங்களிலுள்ள சந்தேகத்தை போக்கவேண்டியது எனது கடமையாகும். அதை செய்வதற்காக சட்டபூர்வமான, சுயாதீனமானதொரு விசாணைக்குழு முன்னிலையில் அல்லது மத்திய இலஞ்ச ஊழல் ஆணைக்குழு முன்னிலையில் விசாரணைக்கு சமூகமளிக்க தயாராகவுள்ளேன்.

சட்டபூர்வமான, சுயாதீனமானதொரு விசாரணைக்குழு அமைக்கப்பட்டு மீண்டும் விசாரணைகள் நடைபெறுமானால் அதற்கு முன்னைய விசாரணைக்குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்கியதுபோன்று பூரணமான ஒத்துழைப்பை வழங்க தயாராகவுள்ளேன்.

கடந்த மூன்றரை வருடங்களில் வடக்கு மாகாண சுகாதாரத்துறை பாரிய அபிவிருத்திகளைக் கண்டுள்ளதை கண்கூடாகப் பார்க்கலாம். நாட்டின் ஏனைய மாகாணங்களுக்கு முன்னுதாரணமான பல திட்டங்களை நாங்கள் செய்திருக்கின்றோம்.

எனினும் அரசியல் காழ்ப்புணர்ச்சிகளாலும், பதவிமோகத்தினாலும் சிலர் என்மீது அபாண்டமான பழியைச்சுமத்தியுள்ளனர்” என அமைச்சர் ப.சத்தியலிங்கம் மேற்படி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related Posts