அரச மருத்துவ அதிகாரிகள் மீளவும் வேலை நிறுத்தப் போராட்டமொன்றை முன்னெடுக்க உள்ளனர். அரச வைத்தியசாலைகளில் மீளவும் கால வரையறையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித அலுத்கே இதனைத் தெரிவித்துள்ளார். இந்த வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அரசாங்க மற்றும் தனியார் துறையினர் ஒத்துழைப்பு வழங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால் கால வரையறையற்ற அடிப்படையில் நாடு தழுவிய ரீதியில் போராட்டம் நடத்தப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வெகு விரைவில் மீளவும் போராட்டம் நடத்தப்படும் எனவும் இந்தப் போராட்டங்கள் நடத்தப்படும் தினங்கள் தொடர்பில் சங்கத்தின் மத்திய செயற்குழு தீர்மானிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறுகிய அறிவித்தலின் அடிப்படையில் இந்தப் போராட்டம் நடத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.