அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மேற்கொண்டுள்ள சேவை புறக்கணிப்பு சம்பந்தமாக இதுவரை எடுக்காத நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர், ’மருத்துவ அதிகாரிகள் சங்கம் இந்த சேவை புறக்கணிப்பை தொடர் சேவை புறக்கணிப்பாக மாற்ற தீர்மானித்துள்ளனர். டெங்கு நோய் பரவிவரும் காலத்தில் மருத்துவர்கள் இப்படி நடந்து கொள்வதை மக்கள் கண்டித்துள்ளனர்.
இவர்கள் மருத்துவர்கள் இல்லை என மக்கள் ஆத்திரத்தில் உள்ளனர். அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தில் உள்ள மருத்துவர்கள் சுகாதார அமைச்சில் சம்பளம் பெறுகின்றனர்.
சங்கத்தின் பிரதிநிதிகளுக்கு டெங்கு நோய் வேலைத்திட்டம் தொடர்பில் பிரச்சினைகள் இருந்தால், அதற்கான பொறுப்பை மருத்துவர்கள் ஏற்கவேண்டும்.
பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் சுகாதார அமைச்சுக்குள் புகுந்து சேதப்படுத்தியுள்ளனர். அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த அழிவை ஏற்படுத்த வந்துள்ளனர் என்பது தெளிவாகியுள்ளது.
அமைச்சில் ஏற்றப்பட்டிருந்த தேசிய கொடியை அகற்றி விட்டு போராட்ட கோஷம் அடங்கிய பதாகையை ஏற்ற சில மாணவர்கள் முயற்சித்துள்ளனர்.
ஊழியர்களின் எதிர்ப்பு காரணமாக அதனை நிறுத்தியுள்ளனர். மேலும் சில மாணவர்கள் ஊழியர்களின் சட்டை பிடித்து வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். கடும் சிரமத்திற்கு மத்தியிலேயே அமைச்சின் ஊழியர்கள் அமைச்சில் இருந்து வெளியேறினர்’ எனவும் தெரிவித்தார்.