தமிழர்கள் செறிந்துவாழும் வடமாகாணத்தை நாம் நழுவவிட்டால் ஏனைய மாகாணங்களில் வாழும் தமிழ் மக்கள் பாரிய பிரச்சனைகளை எதிர்நோக்கும் சாத்தியக்கூறு உள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
விக்னேஸ்வரன் மதிப்புக்குரிய ஒரு தலைவர், அதேபோல் இரா.சம்பந்தனும் மரியாதைக்குரியவர். இந்நிலையில் இவர்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்த பல்வேறு சக்திகள் முனைகின்றன.
மட்டக்களப்பு பன்குடா றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் உரையாற்றுகையில்,
கடந்த காலங்களில் மலையகத்தில் நாங்கள் பிரிந்து நின்று செயற்பட்டதால் எங்களுடைய பல தேவைகளை நிறைவேற்றமுடியாமல் போனது. அதன் பின்னர் தமிழ் முற்போக்கு கூட்டணி என்ற அமைப்பை உருவாக்கி அனைவரும் இணைந்து செயற்படுகின்றோம்.
வடமாகாணசபையில் இடம்பெற்ற நிகழ்வுகள் தமிழ் மக்களுக்கு ஆபத்தானதாகும். கடந்த காலங்களில் வடக்குக் கிழக்கில் பல அமைப்புக்கள் பிரிந்து நின்று செயற்பட்டதால் இழப்புக்கள் அதிகம் கிடைத்ததே தவிர பயன் எதுவும்கிடைக்கவில்லை.
இனிவரும் காலங்களில் தமிழ் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த எடுக்கும் முயற்சிகளுக்கு நாங்கள் துணைபோகக்கூடாது.
தமிழர்கள் சில இடங்களில் பெரும்பான்மையாக வாழ்ந்தாலும், சில இடங்களில் சம அளவிலும், பல இடங்களில் சிறுபான்மையினராகவும் வாழ்கின்றோம். இந்நிலையில் நாங்கள் செறிவாக வாழும் வடமாகாணத்தை விட்டுவிட்டால் ஏனைய இடங்களில் வாழும் தமிழ் மக்களுக்கு பிரச்சனைகள் எழக்கூடும். எனவே வடமாகாணத்தைக் காப்பாற்றவேண்டிய பொறுப்பு அனைத்துத் தமிழ் மக்களுக்கும் உண்டு எனத் தெரிவித்தார்.