‘என்னை பதவி கவிழ்ப்பதற்கான சூழ்ச்சித் திட்டம் கொழும்பிலிருந்தே மேற்கொள்ளப்படுகின்றது’ என வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சரை அவரது ஆதரவாளர்கள் சிலர் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கொழும்பிலிருந்தே தம்மை பதவி கவிழ்க்க சூழ்ச்சித் திட்டம் முன்னெடுக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சதித் திட்டத்தின் பின்னணியில் யார் செயற்பட்டுள்ளார்கள் என்பது பற்றி தமக்குத் தெரியும் எனவும் அதனை அம்பலப்படுத்தப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். அமைச்சர்களுக்கு எதிரான விசாரணைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த சூழ்ச்சித் திட்டம் முன்னெடுக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாகாண அமைச்சர்கள் குற்றமிழைக்கவில்லை என தாம் கூறியிருந்தால் வேறு வழியில் அதாவது குற்றவாளிகளை பாதுகாத்தேன் என்ற அடிப்படையில் தனக்கு எதிராக சதித் திட்டம் தீட்டப்பட்டிருக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விசாரணை நடத்தப்பட வேண்டுமென மக்கள் கோரியதாகவும் அதன் அடிப்படையில் விசாரணை நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.