பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமது பாதுகாப்பு, தொடர்ந்தும் உறுதிப்படுத்தப்பட வேண்டுமென தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கண்டி – தும்பர போகம்பர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் மற்றும் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் அடங்கிய குழுவினர் அண்மையில் சென்று சந்தித்தனர். இதன்போதே தமிழ் அரசியல் கைதிகள் இக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
அத்தோடு, அரசியல் கைதிகள் ஒவ்வொருவர் மீதும் எட்டு தொடக்கம் 10 வரையிலான வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாகவும், இதன் தீர்ப்புகள் ஒவ்வொரு விதமாக வருவதால் தாங்கள் எவ்வளவு காலம் சிறை வாழ்க்கையை அனுபவிக்க போகின்றோம் என்று தெரியவில்லை என்றும் அரசியல் கைதிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
அத்தோடு, யுத்தத்தின் பின்னர் தம்மை புனர்வாழ்விற்கு உட்படுத்தவோ அல்லது விடுவிப்பது தொடர்பாகவோ கவனஞ்செலுத்தப்படுவதில்லை எனவும் தமிழ் அரசியல் கைதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதனையடுத்து, இவ்விடயம் தொடர்பாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவிடம் கலந்துரையாடுவதாகவும் ஒன்று அல்லது வருடம் இரண்டு வருட சிறைத்தண்டனை பெற்றவர்களுக்கு புனர்வாழ்வு அளிப்பதற்கு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு அமைச்சர் சுவாமிநாதனுடன் கலந்துரையாடுவதாகவும் இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.