கிழக்கில் தேசிய அரசு அமைப்பதற்கு ஒத்துழைக்க கூட்டமைப்பபு தயார்- சம்பந்தன் பச்சைக்கொடி

கிழக்கில் நடந்து முடிந்த மாகாண சபைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் அங்கு தேசிய அரசு ஒன்றை அமைக்கும் முயற்சியில் இலங்கை அரசு தீவிரமாக இறங்கி உள்ளமை கொழும்பு அரசியல் வட்டாரங்களில் இருந்து நம்பகமாகத் தெரிய வந்துள்ளது.தேர்தலில் 14 ஆசனங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வந்தபோதும் கிழக்கில் ஆட்சி அமைப்பதற்கு தேவையான ஆதரவை பெறுவதில் தொடர்ந்தும் சிக்கல் நிலை காணப்படுகின்றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவளித்தால் மட்டுமே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கிழக்கில் மாகாண அரசை அமைக்க முடியும்.

ஆனால்,அரசுடன் சேர்வதற்கு முஸ்லிம் காங்கிரஸுக்குள் ஒரு சாரார் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருவதால் இதுகுறித்து நேற்று நள்ளிரவு வரை தீர்க்கமான முடிவு எதனையும் எடுக்கமுடியாத நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இருந்தது.

இந்த நிலையில் கிழக்கில் தேசிய அரசு ஒன்றை அமைப்பதற்கான சமிக்ஞைகள் அரசிடம் இருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக நம்பகமாகத் தெரிய வருகிறது. சர்வதேச நாடுகள் பலவற்றின் அழுத்தங்களைத் தொடர்ந்தே அரசு, கிழக்கில் தேசிய அரசை அமைக்கும் நிலையை நோக்கி நகர்வதாக கொழும்பில் உள்ள பெயர் குறிப்பிட விரும்பாத இராஜதந்திரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த விடயம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனிடம் கேட்ட போது “தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அரசு இதய சுத்தியுடன் செயற்படுவதை நிரூபித்தால் எமது மக்களின் நலன் கருதி கிழக்கில் தேசிய அரசு அமைக்கும் திட்டத்தை பரிசீலிப்பதற்கும் நாம் தயாராகவே இருக்கின்றோம்’ என்று தெரிவித்தார்.

இதேவேளை நேற்று மகாவலி கேந்திர நிலைய கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்துத் தெரிவித்த அமைச்சர் டலஸ் அழகப்பெரும “தேசிய நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் இலங்கையில் கட்டியெழுப்புவதற்கு கூட்டமைப்பு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று பகிரங்கமாக கோரிக்கை விடுத்திருந்தமை இதன் ஒரு பகுதியே என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இப்புதிய நகர்வின் காரணமாக முஸலிம்காங்கிரஸ் பேரம்பேசும் திறனில் இருந்து ஓரங்கட்டப்படும் என்றும் இது அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் என்றும் அரசியல் அவதானிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Related Posts