தரம் 7 மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள புவியியல் புத்தகம் விஷ இரசாயனத் தாளில் அச்சிடப்பட்டுள்ளதுடன், அது மாணவர்களின் சுகாதாரத்துக்கு கேடுவிளைவிக்கவல்லது எனவும், அவ்வாறு நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்ட தரம் 7 புவியியல் புத்தகத்தை மீளப் பெறுமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளது.
தொழில்சார் நிபுணர்களின் கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அச்சங்கத்தின் செயலாளரான வைத்தியர் ஹரித்த அளுத்கே தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
தரம் 7 மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள புவியியல் புத்தகங்கள் விஷ இரசாயனம் கலந்த காகிதத்தில் அச்சிடப்பட்டுள்ளன. இதனால் மாணவர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.
குறித்த இரசாயன காகிதத்தினால் அச்சிடப்பட்ட 5 இலட்சம் புத்தகங்களுக்கு கடந்த வருடம் அரசாங்கத்தினால் 15 கோடி செலவிடப்பட்டுள்ளது.
தற்போது அதில் 2 இலட்சம் புத்தகங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.
குறித்த புத்தகத்தின் காகிதத்தில் அசற்றோபினோன், பென்சலிடிகயிட், பென்சயில் அற்ககோல், பென்சோபினோன் போன்ற இரசாயனங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களின் கண்பார்வைக்கு தீங்கேற்படுத்துவதுடன் உடல் நல ஆரோக்கியத்துக்கு கேடும் விளைவிக்கும். அத்துடன் குறித்த காகிதத்தால் சுற்றாடல் பாதிப்பும் ஏற்படும்.
குறித்த புத்தகங்களை ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன உடனே மீளப் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் இது தொடர்பான விசாரணையை மேற்கொள்ளவேண்டுமெனவும் தெரிவித்தார்.