அமைச்சர்கள் விடயத்தில் முதலமைச்சர் தன்னிச்சையாக செயற்பட முடியாது: தவராசா

மாகாண அமைச்சர்களை நீக்குவதற்கும் புதிதாக நியமிப்பதற்குமான முழு அதிகாரமும் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு உண்டு என்றாலும், தற்போதைய நிலையில் வடக்கு மாகாண சபை அமைச்சர்களின் பதவி நீக்கம் தொடர்பில் முதலமைச்சர் தன்னிச்சையாக செயற்பட முடியாதென வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண அமைச்சர்கள் நால்வருக்கு எதிராக ஊழல் மோசடி தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதோடு, அவர்களில் இருவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக அது தொடர்பில் விசாரித்த குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. எனினும், குற்றஞ்சாட்டப்பட்ட நான்கு அமைச்சர்களையும் பதவி நீக்கம் செய்துவிட்டு புதிதாக நான்கு அமைச்சர்களை முதலமைச்சர் நியமிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து வினவியபோதே வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் மேற்குறித்தவாறு தெரிவித்தார்.

விசாரணைக் குழுவில் இருவர் மாத்திரமே பதவி விலக வேண்டுமென பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில், நால்வரையும் பதவி நீக்குவதானது குற்றஞ்சாட்டப்பட்ட ஏனைய இரண்டு அமைச்சர்களையும் சமாதானப்படுத்தும் ஒரு செயலாக அமைந்துவிடும் என்றும் எதிா்க் கட்சித் தலைவா் தவராசா சுட்டிக்காட்டினார்.

Related Posts